Sunday, October 6, 2024
Home » சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா… இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!

சமூகப் பரவலாகிவிட்ட கொரோனா… இனி ஸ்லீப்பர் செல் யாராகவும் இருக்கலாம்!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் ‘ஏதோ சீனாவுல வந்திருக்காம்…’ ‘அமெரிக்காவுல ரொம்ப பாதிப்பாம்’ என்றெல்லாம் இனியும் எங்கோ நடப்பதுபோல் பேசிக் கொண்டிருக்க முடியாது. டேபிள் மேட் விளம்பரம்தான் இப்போதைய நிஜ நிலவரம். ‘எதிர்த்த வீட்ல இருக்கு… பக்கத்து வீட்ல இருக்கு… இன்னும் உங்க வீட்ல இல்லையா?’ என்கிற அளவுக்கு கொரோனா பரவல் நிலைமை மோசமாகிவிட்டது. கொரோனாவில் 4 நிலைகளை நிபுணர்கள் சொல்கிறார்கள். முதல் நிலை என்பது கொரோனா பரவல் உள்ள நாடுகளுக்குச் சென்று வந்தவர்களுக்கு ஏற்படுவது… 2-ம் நிலை என்பது கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரவுவது… இந்த இரண்டு நிலைகளையும் எப்போதோ கடந்துவிட்டோம். இப்போது நாம் இருப்பது மூன்றாம் நிலை. இதையே சமூகப் பரவல் என்கிறோம். தொற்று யாரிடம் இருந்து யாருக்கு எப்படி பரவுகிறது என்பதை இனி கண்டறிய முடியாது. பொதுமக்களோடு பொதுமக்களாகக் கலந்து வாழும் தீவிரவாதிகளை ஸ்லீப்பர் செல்கள்(Sleeper Cells) என்று குறிப்பிடுவார்கள். அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாது. ஆனால், நாசகார வேலைகளை செய்து முடித்த பிறகே உணர முடியும். சமயங்களில் இறுதிவரை அவர்களைக் கண்டுகொள்ளவே முடியாது. மூன்றாம் நிலை கொரோனா சமூகப் பரவலில், இப்படி ஸ்லீப்பர் செல்களாகவே பலரும் மாறிப் போயிருக்கிறோம். நம்மில் யாருக்கு கொரோனா இருக்கிறது; யாருக்கு இல்லை என்பது இப்போது வெளிப்படையாகத் தெரியாது. இதையே அறிகுறிகளற்ற கொரோனா என்கிறார்கள். இந்த Asymptomatic corona உடையவர்கள் தமிழகத்தில் 88 சதவிகிதம், இந்திய அளவில் 80 சதவிகிதம் என்றும் தரவுகள் கூறுகின்றன. அறிகுறிகள் இல்லாதவர்கள் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும்போது தப்பித்துக் கொள்வார்கள். இல்லாவிட்டால் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்றும் நோய்த் தொற்று நிபுணர்கள் கூறுகிறார்கள். Asymptomatic வகையினருக்கு பிரச்னை வந்தாலும், வராவிட்டாலும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு; அவர்கள் கொரோனாவை பரப்பிக் கொண்டுதான் இருப்பார்கள் என்றும் எச்சரிக்கிறது மருத்துவ உலகம். இதனால் இவர்களை Silent super spreader என்று கூறுகிறது Annals of Internal medicine இதழின் புதிய ஆய்வு. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று வழக்கம்போல் மறுக்கிறார் WHO-வின் விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் மரியா. எது எப்படி இருந்தாலும், இன்னும் கவனமுடன் அன்றாட வாழ்க்கையை அணுகுவதே நமக்கு பாதுகாப்பு. அதை சகமனித தீண்டாமை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதும் கட்டாயம். ‘தளர்வு அரசாங்கம்தான் கொடுத்திருக்கிறது; கொரோனா அல்ல’ என்ற வாசகங்களை அவ்வப்போது யாரேனும் சொல்கிறார்கள். அது உண்மையும் கூட! பொருளாதார நெருக்கடிகளுக்காக வேறு வழியின்றி மாநில, மத்திய அரசாங்கங்கள் தளர்வுகளைப் படிப்படியாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அதனால் கொரோனா ஒழிந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை. ஒரு வினோதமான உண்மை என்னவெனில் சீனா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா ஏற்பட்டபோதெல்லாம் நாம் அதீத கவனத்துடனும், பயத்துடனும் இருந்தோம். ஆனால், நம் பக்கத்து தெருவுக்கும், எதிர்த்த வீட்டுக்கும் கொரோனா வந்த இப்போது அலட்சியமாகவும், அச்சமின்றியும் இருக்கிறோம். காசிமேட்டில் மீன் வாங்கச் செல்கிற கூட்டத்திலும், பேருந்துகளில் முண்டியடிக்கும் கூட்டத்திலும் இந்த அலட்சியத்தைக் காண்கிறோம். இவ்வளவு அலட்சியமாக நடந்துகொள்கிற நாம்தான் கொரோனா நோயாளி இறந்தால் அவரை அடக்கம் செய்ய விடாமலும் தடுக்கிறோம். கொரோனா வந்து குணமடைந்தவரையும், அவர்களது குடும்பத்தாரையும் தீண்டத்தகாதவர்கள் போலவும் நடத்துகிறோம். ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்’ – என்றார் திருவள்ளுவர். அஞ்ச வேண்டியதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும். அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும் என்பதே இதன் அர்த்தம். இதை உணர்ந்துகொண்டு ஸ்மார்ட்டாக கொரோனாவைக் கையாண்டு வெற்றியடைய வேண்டியதே நமக்கு இருக்கும் இந்த ஆண்டின் மிகப்பெரிய டாஸ்க்… வெல்வோம்!தொகுப்பு: ஜி.ஸ்ரீவித்யா

You may also like

Leave a Comment

nineteen − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi