சமூகநீதிக் காவலன்

அகில இந்திய மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை கடும் சட்டப் போராட்டத்திற்கு பின் பெற்றுத்தந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பல்வேறு வகையில் எத்தனையோ முட்டுக்கட்டைகளை போட்டும் அத்தனையும் தகர்த்தெறிந்து இன்று 27 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாட்டிற்கு மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் உள்ள ஓபிசி மாணவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் நம் முதல்வர். இந்த சட்டப்போராட்டத்தை இப்போது புரிந்து கொண்ட வட இந்திய மக்கள் நம் முதல்வரை சமூகநீதிக்காவலனாக கொண்டாடுகிறார்கள். மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் நடவடிக்கையால் இத்தனை ஆண்டுகளில் ஓபிசி மாணவர்கள் இழந்தது கிட்டத்தட்ட 11 ஆயிரம் மருத்துவ இடங்கள். இப்போது மீண்டும் வந்திருக்கிறது 27 சதவீத இடஒதுக்கீடு.அகில இந்திய மருத்துவ படிப்புக்கான இடத்தை பெறவே போராடி வென்றவர் என்றால் நீட் தேர்வை ஒழித்து பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உத்தரவாதம் அளித்தவர் நமது முதல்வர். அவரது வாக்குறுதியை நிறைவேற்ற எத்தனை முன்னெடுப்புக்கும் செல்வார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில்தான் வரலாற்றில் முதல்முறையாக கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாவை மீண்டும் ஒருமனதாக சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் மூலம் நிறைவேற்றி, அதை அவருக்கு அனுப்பி வைத்து  இருக்கிறார் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின்.மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் கடந்த காலங்களில் மாணவர் சேர்க்கைக்கு இருந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்தது தமிழக சட்டசபை தான். இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து இருக்கிறார். இப்போது நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப மறுத்து சட்டசபை மாண்பு குலைக்கப்பட்டு இருக்கிறது. அதை சரி செய்யும் நடவடிக்கையின் அடிப்படையில் தான் தமிழக சட்டசபையில் மீண்டும் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. நீட் தேர்வு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று 2013ம் ஆண்டு ஜூலை 18ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு தனியார் பயிற்சி நிறுவனம் இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்தது. உடனே 2016ம் ஆண்டு ஏப்ரல் 11ல் ஒன்றிய அரசு அவசரச் சட்டம் மூலம் நாடு முழுவதும் நீட் தேர்வை அமல்படுத்தியது. நாடு முழுவதும் ஒரு மொழி இல்லை. நாடு முழுவதும் ஒருபாடத்திட்டம் இல்லை. நாடு முழுவதும் ஒரே ஆட்சி முறை இல்லை. மாநிலங்களின் ஒருங்கிணைப்பு தான் ஒன்றிய அரசு என்பதை மோடி அரசு மறந்து பிடிவாதமாக அமல்படுத்தப்பட்ட நீட் தேர்வால் தமிழகம் இழந்தது ஏராளம். அனிதா தொடங்கி இன்று வரை எத்தனையோ மாணவ, மாணவிகள் நீட் தேர்வு பீதியில் உயிரை மாய்த்து இருக்கிறார்கள். எனவே தான் நீட் தேர்வுக்கு எதிராக இன்று தமிழகத்தின் குரல் ஓங்கி ஒலிக்கத்தொடங்கி உள்ளது. இந்த குரல் நாடு முழுவதும் எட்டும். வெற்றிக்கொடி கட்டும். அப்போது இந்த நாடே நம் முதல்வரை மீண்டும் ஒருமுறை கொண்டாடும்….

Related posts

கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு

மீட்பு பணிகள் துரிதம்

புதிய அத்தியாயம்