சத்துணவு அமைப்பாளர் வேலை தருவதாக ₹76 லட்சம் மோசடி புகார் முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு ஐகோர்ட் நிபந்தனை முன்ஜாமீன்

சென்னை: சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்துக்காக பல்வேறு நபர்களிடம் இருந்து 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வசூலித்து சமூக நலத்துறை முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜனிடம் வழங்கியதாகவும், பணத்தை பெற்றுக் கொண்டு எவருக்கும் பணி நியமனம் வழங்கவில்லை எனக் கூறி குணசீலன் என்பவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் காவல் துறையினர் தங்களை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகராஜன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனுவில், பணிநியமனம் வழங்குவதாக கூறி எவரிடமும் பணம் பெறவில்லை. புகார் அளித்த குணசீலன் தங்கள் உறவினர். குடும்ப பகை காரணமாக தங்களுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளார். சத்துணவு அமைப்பாளர்கள், தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களால் நியமிக்கப்பட்டனர். இந்த புகார் தொடர்பாக ராசிபுரம் போலீசார் ஏற்கனவே தங்களை விசாரித்துள்ளனர் என்று கூறியிருந்தனர்.இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் ₹25 லட்சத்தை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். இருவரும் இரண்டு வாரங்களுக்கு தினமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன்பின்னர் மறு உத்தரவு வரும்வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு