சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: போதைப்பொருள் கடத்தல் மூலம் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் திகார் சிறையில் உள்ள சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை நேற்று கைது செய்தனர்.  இந்தியாவில் இருந்து ஊட்டச்சத்து உணவு பொருட்கள் ஏற்றுமதி என்ற பெயரில் சர்வதேச நாடுகளுக்கு உயர் ரக போதைப்பொருள் மூலப்பொருட்களை கடத்திய வழக்கில், சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கடந்த மார்ச் மாதம் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருட்கள் விற்பனை செய்த பணத்தில் பெரும் அளவிலான தொகையை திரைப்படம் எடுப்பதற்கும், புதிய ஓட்டல்கள், டீ ஷாப் திறப்பதற்கும் முதலீடு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் அளித்த தகவலின்படி, போதைப்பொருட்கள் ஊட்டச்சத்து மாவு போன்று பேக்கிங் செய்து கொடுத்த சதா (எ) சதானந்த் என்பவரை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கில் ஜாபர் சாதிக் தயாரித்த திரைப்படங்களை இயக்கிய நெருங்கிய நண்பரான திரைப்பட இயக்குநர் அமீர் மற்றும் தொழிலதிபர்களான அப்துல் பாசித் புகாரி, சயத் இப்ராகிம் ஆகியோரை டெல்லியில் உள்ள போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் அளித்த சம்மனை தொடர்ந்து நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

போதைப்பொருள் கடத்தல் மூலம், கைதான ஜாபர் சாதிக், ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்து இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து சட்டவிரோத பணப் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் தனியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கடந்த ஏப்ரல் 11ம் ேததி ஜாபர் சாதிக் மற்றும் அவரது நெருங்கிய நண்பரும், இயக்குநருமான அமீர், அப்துல் பாசித் புகாரி, சயத் இப்ராகிம், ரகு உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என சென்னை முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வழக்கு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர்.

மேலும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக் மற்றும் அவரது மனைவி, சகோதரன் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் போதைப்பொருட்கள் விற்பனை மூலம் பல நூறு கோடி அளவுக்கு சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்தது உறுதியாளது. அதைதொடர்ந்து திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்த வழக்கில் கைது செய்தனர்.

 

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்றல் சட்டத்தில் திருத்தம்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல்