சங்கராபுரம் அருகே பரபரப்பு குடிநீர் வழங்கக்கோரி அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

சங்கராபுரம், ஜூன் 1: சங்கராபுரம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது புத்திராம்பட்டு ஊராட்சி. இந்த ஊராட்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த புத்திராம்பட்டு கிராம மக்கள் நேற்று சங்கராபுரத்திற்கு வந்த அரசு பேருந்தை சிறைப்பிடித்து புத்திராம்பட்டு-கல்வராயன்மலை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படுகிறது என்று உறுதி அளித்ததின்பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்