சங்கராபுரம் அருகே துணிகரம் அரசு பஸ் நடத்துனர் வீட்டை உடைத்து 86 பவுன் நகை, ₹23 லட்சம் கொள்ளை

சங்கராபுரம், பிப். 16: சங்கராபுரம் அருகே அரசு பேருந்து நடத்துனர் வீட்டில் 86 பவுன் நகை, ரூ.23 லட்சம் ரொக்க பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சௌந்தரவல்லிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ஜோதி, அரசு பேருந்து நடத்துனர். இவர் கடந்த 12ம் தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு தனது மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தேதி குறிப்பதற்காக புதுச்சேரிக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் உறவினர் வீட்டுக் சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் ஜன்னல் கதவுகள் உடைந்து கிடப்பதை கண்ட அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 86 பவுன் தங்க நகை, ரூ.23 லட்சம் பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த தகவல் அறிந்து வந்த விழுப்புரம் எஸ்பி தீபக் சிவாச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு