கோவை மாவட்டத்தில் 128 மையங்களில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு 35 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

கோவை: தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் இன்று துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணையில் மாணவர்கள் எம்பிபிஎஸ், இன்ஜினியரிங், வேளாண் போன்ற உயர்கல்வி சேர்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் போதிய காலஅவகாசம் அளிக்கப்பட்டு முக்கிய பாடங்களுக்கான தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இயற்பியல் பாடத்திற்கு 5 நாட்கள், கணித பாடத்திற்கு 5 நாட்கள், உயிரியியல் பாடத்திற்கு 3 நாட்கள், வேதியியல் பாடத்திற்கு 2 நாட்கள் கால இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வுக்காக தனித்தேர்வர்களுக்கு 6 தேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 128 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 12 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 2 விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 32 வழித்தடங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. பிளஸ்-2 பொதுத்தேர்வை 360 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 16,661 பேர், மாணவிகள் 19,166 பேர் என மொத்தம் 35,827 பேர் எழுதுகின்றனர். தேர்வுக்காக தேர்வு மையங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்வு மையத்தில் இருக்கைகளில் மாணவ, மாணவிகளின் நுழைவுச்சீட்டு எண் எழுதும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. மாணவர்களின் வசதிக்காக தேர்வு மையத்தின் வெளியே தகவல் பலகையில் அறை எண், ஹால் டிக்கெட் எண், தேர்வு தேதி உள்ளிட்டவை அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளன.  தேர்வு நாளான இன்று காலை வினாத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டு தேர்வு மையங்களில் ஒப்படைக்கப்பட உள்ளன. தேர்வில் முறைகேடுகள், தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில் கண்காணிப்பு பணிக்காக 180 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுத்தேர்வையொட்டி தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளுக்கு பஸ் வசதிகள், மின்சார வசதிகள் தடையில்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  பிளஸ்2 தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1 மணி வரை நடக்கிறது. தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் கட்டாயம் ஹால்டிக்கெட் எடுத்து வரவேண்டும். தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும், தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளும் செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வின்போது முறைகேடுகளில் ஈடுபட வேண்டாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …

Related posts

கற்பகம் பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஒராட்டுக்குப்பையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்புடன் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை பேரூராட்சி தலைவர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

செட்டிபாளையம் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைள் திறப்பு