கோவை சரக போக்குவரத்து இணை கமிஷனர் காரில் ரூ.28 லட்சம் சிக்கியது: லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

கோவை: கோவை சரக போக்குவரத்து இணை கமிஷனரின் காரில் ரூ.28.35 லட்சம் சிக்கியது. இது தொடர்பாக இணை கமிஷனர், ஓய்வு பெற்ற உதவியாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை சரக போக்குவரத்து இணை கமிஷனராக இருப்பவர் உமா சக்தி. இவர் நேற்று, சவுரிபாளையம் ரோடு கிருஷ்ணா வீதியில் சொந்த காரில் சென்றபோது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.28.35 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்திற்கான ஆதாரங்களை போலீசார் கேட்டபோது அவரால் உரிய பதில் சொல்ல முடியவில்லை. இவரது கட்டுப்பாட்டில் கோவை, நீலகிரி, திருப்பூர்  மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள், மாவட்ட, மாநில எல்லை செக்போஸ்ட்கள் வருகிறது. இங்கே ஆய்வு பணிக்காக சென்ற உமாசக்தி முறைகேடாக பணம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஓய்வுபெற்ற வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளர் செல்வராஜ் என்பவரின் மூலமாக பணம் வசூலித்து அதை காரில் வைத்து வீட்டிற்கு கொண்டு சென்றபோது போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் உமா சக்தி, செல்வராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். உமா சக்தி தனது கட்டுப்பாட்டில் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் அடிக்கடி பணம் வசூலித்து வந்துள்ளார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. குறிப்பிட்ட தொகையை கட்டாயம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்திருப்பதாக தெரிகிறது. கடந்த 2 ஆண்டாக இவர் கோவையில் பணியாற்றி வருகிறார். நேற்று இவர் கோவையில் வசூல் பணத்துடன் செல்ல முயன்றபோது உரிய தகவல் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பாலசுந்தரம் ரோட்டில் உள்ள போக்குவரத்து இணை கமிஷனர் அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். போலீசார் கூறுகையில், ‘‘பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கான ஆதாரங்களை அவர் முறைப்படி ஒப்படைக்கவேண்டும். ஆதாரத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்….

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி