கோவையில் ‘வலிமை’ சினிமா திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு-6 பேரிடம் போலீசார் விசாரணை

கோவை : கோவையில் ‘வலிமை’ சினிமா படம் வெளியான தியேட்டர் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக 6 பேரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் காம்ப்ளக்சில் 3 சினிமா தியேட்டர்கள் உள்ளன. நேற்று இந்த தியேட்டர்களில் அஜித்குமார் நடித்த ‘வலிமை’ என்ற திரைப்படம் வெளியானது. அதிகாலை 4 மணிக்கு ரசிகர் மன்ற காட்சி திரையிடப்பட்டது. இந்த படத்தை காண ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. காலை 4.30 மணிக்கு தியேட்டர் எதிரேயுள்ள ரோட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுடன் வந்த 2 பேர் தீ பற்ற வைத்து அதை வாகனங்கள் நிறுத்தும் ரோட்டோர பார்க்கிங் முன் வீசிவிட்டு பைக்கில் ஏறி தப்பி சென்றனர். பல இடங்களில் சிதறி வெடித்தது. ஒரு பைக்கில் தீப்பற்றி எரிந்தது. பக்கத்தில் நின்றிருந்த ராமச்சந்திரன் என்பவர் காலில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் இரண்டாவது காட்சி சினிமா படம் பார்க்க சிலர் வந்திருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பைக்கில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.இது தொடர்பாக காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.‌ கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் வின்சென்ட் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது 2 வாலிபர்கள் பைக்கில் வந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீவைத்து பைக் மீது வீசி தப்பி சென்றது தெரியவந்தது.பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நேரத்தில், இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லை. அவர்கள் சினிமா தியேட்டர் வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தியேட்டர் முன் உயரமான இரும்பு கேட் இருக்கிறது. பெட்ரோலை பற்ற வைத்து வீசினால் தீ தங்கள் மீதும் பரவி விடும் வாய்ப்பு இருந்ததால் அவர்கள் ரோட்டோரம் வீசியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. சினிமா தியேட்டர் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் நடந்த இடத்தில் அஜித்குமார் ரசிகர்கள் குவிந்தனர். அந்தப் பகுதியில் பதட்டம் நிலவியதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். பெட்ரோல் குண்டு வீசி தப்பிய நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சினிமா படக்காட்சியை நிறுத்தும் நோக்கத்தில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு நடந்திருக்கலாம் என அஜித்குமார் ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சினிமா தியேட்டர் பார்க்கிங் ஏரியா மற்றும் தியேட்டர் பகுதிகளில் அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க போலீசார் சோதனை நடத்தினர்.தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதாவது உள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டது.‌ கோவை நகரில் உள்ள மேலும் சில சினிமா தியேட்டர்கள் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ‘வலிமை’ படம் வெளியிடப்பட்ட தியேட்டர்கள், பார்க்கிங் ஏரியா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் ‘பிளாக் டிக்கெட்’ விற்பனை செய்து வருவதாக தெரிகிறது.அந்த காம்ப்ளக்சில் உள்ள 3 சினிமா தியேட்டர்களிலும் வலிமை படம் திரையிடப்பட்டிருந்தது. முதல் காட்சிக்கான 390 டிக்கெட்டை இவர்கள் விற்பனை செய்திருப்பதாக தெரிகிறது. ஒரு டிக்கெட் 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விலை வைத்து இவர்கள் விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில், முதல் காட்சியில் அதிக விலைக்கு இவர்களால் விற்பனை செய்ய முடியவில்லை. இந்த விவகாரத்தில் அவர்களுக்கு இடையே மோதல், தகராறு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.இதைத்தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசி 2 பேர் தப்பியிருப்பதாக கூறப்படுகிறது. 6 பேரும் முன்னுக்கு பின் முரணாக குழப்பம் ஏற்படுத்தும் வகையில் போலீசாரிடம் பேசி வருவதால் போலீசாரால் உண்மையை கண்டறிய முடியவில்லை. பெட்ரோல் குண்டு வீசியவர்கள் வேறு ஒரு தரப்பை சார்ந்தவர்களா?, என்ன காரணத்திற்காக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.பட்டாசு வெடிச்சதா நெனச்சோம்..!பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தபோது அந்த பகுதியில் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் பட்டாசு வெடித்திருப்பதாக நினைத்து வேடிக்கை பார்த்துள்ளனர். பெட்ரோல் குண்டு என தெரிந்திருந்தால் அந்த பைக்கை விரட்டி பிடித்திருப்போம், என்ன விவரம் என தெரியாமல் விட்டு விட்டோம் என வேடிக்கை பார்த்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான வீடியோ வெளியாகி வைராக பரவி வருகிறது. போலீசார் இந்த வீடியோ அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். ‘வலிமை‘ பட சினிமா தியேட்டர் முன் குண்டு வீசப்பட்டதால் அஜித்குமார் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்….

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு