கோவையில் அனுமதியில்லாத ஆவின் பாலகங்களை அப்புறப்படுத்த வேண்டும்

கோவை, ஏப். 13: கோவையில் அனுமதி பெறாமல் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆவின் கூட்டுறவின் சார்பில் நுகர்வோர் அமைப்புகளுடன் குறைதீர் கூட்டம் ஆர்.எஸ் புரத்தில் உள்ள ஆவின் விற்பனை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆவின் பொது மேலாளர் ராமநாதன் தலைமை தாங்கினார். இதில், உதவி பொது மேலாளர் சாந்தி மற்றும் விற்பனை பிரிவு மேலாளர் நாகராஜன், கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு, ஜெயராமன், பிரதீப் குமார், வெங்கடேசன், தேவபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், கன்ஸ்யூமர் அமைப்பு லோகு கூறும்போது, ‘‘கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், வருவாய் துறை அலுவலகங்கள், காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் மற்றும் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் ஆவின் பாலகம் திறக்க வேண்டும். ஆவின் பால் கூடுதல் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கும் வசதியாக கட்டணம் இல்லாத தானியங்கி தொலைபேசி அறிமுகப்படுத்த வேண்டும். அனைத்து ஆவின் பால் விற்பனை முகவர்கள் கடைகளில் விலை பட்டியல் வைக்க வேண்டும்.

மருதமலை, ஈச்சனாரி, கோனியம்மன் கோயில் ஆகிய இடங்களில் ஆவின் பாலகம் திறக்க வேண்டும். பீளமேடு டைட்டில் பார்க் சாலை, சவுரிபாளையம் ஜிவி ரெசிடென்சி மற்றும் பல இடங்களில் விதிகளை மீறி ஆவின் பாலகம் என்ற பெயரில் டீக்கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் ஆவின் நிறுவனம் மூலம் கேண்டின் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார். அப்போது, ஆவின் பொது மேலாளர் ராமநாதன் கூறும்ேபாது, ‘‘கோவையில் 130 ஆவின் பாலகங்களுக்கு அளிக்கப்பட்ட உரிமம் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட ஆவின் பாலகங்களை அகற்றக்கோரி மாநகராட்சி கமிஷனர், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர், காவல்துறை ஆணையருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட முறை ஆவின் மூலம் கடிதம் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆவின் பெயரை சட்ட விரோதமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆவின் பால் கூடுதல் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் விரைவில் கட்டணம் இல்லாத தானியங்கி தொலைபேசி அறிவிக்கப்படும். பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆவின் பாலகம் திறப்பது குறித்து மாவட்ட கலெக்டரிடம் கலந்து ஆலோசித்து விரைவில் அரசுத்துறை அலுவலகங்களில் பாலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மருதமலை ேகாயிலில் ஆவின் பாலகம் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் மற்ற கோவில்களிலும் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையருடன் கலந்து பேசி பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு உள்ள தேனீர் கடை தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. விரைவில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் பாலகம் திறக்கப்படும். இதனை தொடர்ந்து நுகர்வோர் அமைப்புகள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.

Related posts

சின்னமனூர் அருகே தோட்டத்தில் புகுந்து மோட்டார், குழாய்களை அடித்து நொறுக்கிய மர்மநபர்கள்: போலீசார் விசாரணை

தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தல்

தீ விபத்தில் வீடுகள் சேதம்