கோவில்பட்டி அருகே பெண் கொலையில் துப்பு துலங்க முடியாமல் திணறும் போலீஸ்

கோவில்பட்டி, ஏப்.16: கோவில்பட்டி அருகே ஜமீன் தேவர்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி வெள்ளத் துரைச்சி(28). இவர் கடந்த 9ம்தேதி இரவு குமரரெட்டியாபுரத்திலிருந்து கட்டாரங்குளத்திற்கு ஆட்டோவில் சென்றபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஆட்டோ டிரைவர் கோவில்பட்டி வானரமுட்டி ஆறுமுகபாண்டி மகன் சண்முகராஜ் (33) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன், கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன், மேற்கு இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், கிழக்கு இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், நாலாட்டின்புத்தூர் இன்ஸ்பெக்டர் சுகாதேவி ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் சண்முகராஜிடம் நடத்திய விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

ஆட்டோவை வழிமறித்து வெட்டியது யார்? என்பது குறித்து அவர் எந்தத்தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால் குமரெட்டியாபுரம் மெயின் ரோட்டிலிருந்து கட்டாரங்குளத்திற்கு செல்லும் காட்டுப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவிலும், வெள்ளத்துரைச்சியின் ஆன்ட்ராய்டு போனிலும் ஏதாவது தகவல்கள் கிடைக்கலாம் என்று தனிப்படையினர் எதிர்பார்த்தனர். சைபர் கிரைம் போலீஸ் மூலம் ஆன்ட்ராய்டு போன் லாக்கை நீக்கி பார்த்தும், அதில் அவர் கடைசியாக சண்முகராஜூக்கு பேசியது மட்டும் தெரியவந்தது. வேறு எந்த தகவலும் இல்லை. சிசிடிவி கேமராவிலும் காட்டுப்பகுதிக்குள் ஆட்டோ நுழைவது தெரிகிறதே தவிர வேறு புட்டேஜ் இல்லை. இதனால் போலீசார் உரிய வழி முறையில் சண்முகராஜிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் நெல்லை அரசு மருத்துவமனையிலிருந்து சண்முகராஜ், டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் அவரிடம் தனிப்படையினர் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கொலை நடந்து 6 நாட்களாகியும் துப்பு துலங்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து