‘கோவிட் டூல்கிட்’ விவகாரம் டிவிட்டர் அலுவலகத்தில் ரெய்டு: டெல்லி போலீஸ் அதிரடி

புதுடெல்லி: கொரோனாவை கையாள்வதில் பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் விளைவிக்க சர்வதேச பத்திரிகைகளுடன்  சேர்ந்து காங்கிரஸ் ‘கோவிட் டூல்கிட்’ ஒன்றை தயாரித்துள்ளதாக பாஜ தலைவர்கள் சமீபத்தில் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக  டிவிட்டரில் பாஜ செய்தி தொடர்பாளர் சம்பத் பித்ரா ‘டூல்கிட்’ தகவல்களை வெளியிட்டார். அந்த டிவிட்டை ஆய்வு செய்த டிவிட்டர்  நிர்வாகம் ‘சித்தரிக்கப்பட்ட தகவல்’ என குறிப்பு வெளியிட்டது. இதற்கு மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.உடனடியாக ‘சித்தரிக்கப்பட்ட தகவல்’ என்ற டேக்கை நீக்க வேண்டும் எனவும், இதுபோன்ற செயலில் டிவிட்டர் தன்னிச்சையாக  செயல்படக்கூடாது எனவும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார், டிவிட்டர் இந்தியா நிறுவனத்திற்கு  நோட்டீஸ் விடுத்தனர். ‘சித்தரிக்கப்பட்ட தகவல்’ என்ற டேக் குறித்து விளக்கம் தர கூறியிருந்தனர்.இதைத் தொடர்ந்து நேற்று மாலை டெல்லி சிறப்பு படை போலீசார் குருகிராம் மற்றும் லடோ சராய் பகுதிகளில் உள்ள டிவிட்டர் இந்தியா  அலுவலகங்களில் திடீர் ரெய்டு நடத்தினர். அங்குள்ள அதிகாரிகளிடம் ‘சித்தரிக்கப்பட்ட தகவல்’ டேக் தொடர்பாக விசாரணை நடத்தினர்.  இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘உண்மையை அறிய விசாரணை நடத்தப்பட்டது. எது உண்மையான தகவல் என டிவிட்டருக்கு  எப்படி தெரியவந்தது என்பது குறித்து விசாரித்தோம்’’ என்றனர்.பேஸ்புக், டிவிட்டர் நாளை முடங்கும்?விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் சர்வதேச அளவில் மத்திய அரசுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக பிரச்னை எழுந்தது. இதனால்  டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், ஓடிடி மற்றும் செய்தி இணையதளங்களுக்கு புதிய விதிமுறையை  கடந்த பிப்ரவரி 25ம் தேதி வகுத்தது. இதில் இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட வேண்டும், மத்திய அரசு கேட்கும் தகவல்களை சமூக  வலைதளங்கள், செய்தி இணையதளங்கள் தர வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை 3  மாதத்தில் ஏற்காவிட்டால், மத்திய அரசு அளித்து வரும் சலுகை, பாதுகாப்பு நீக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருந்தது. அதன்படி,  இந்த காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதுவரை எந்த நிறுவனமும் புதிய விதிமுறையை ஏற்கவில்லை என்பதால், டிவிட்டர்,  பேஸ்புக் போன்றவை நாளை முடக்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது….

Related posts

பலத்த போலீஸ் பாதுகாப்பு: ஜம்மு – காஷ்மீரில் நாளை 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு

திருட முயன்ற வாலிபரை கம்பத்தில் கட்டி அடி, உதை: பசி என்று அலறியதால் சாப்பாடு கொடுத்தனர்

தந்தை பெரியாருக்கு பினராயி விஜயன் புகழாரம்