கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை கிராமங்களுக்கு சாலை வசதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் நன்றி

திருத்தணி: திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் கிராமத்துக்கு உட்பட்ட டிஎன்ஆர். கண்டிகை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் அனைவரும் விவசாய கூலி தொழிலாளர்கள். இந்த கிராம பொதுமக்கள் பல வருடங்களாக ஏரிக்குள் இறங்கி நடந்து செல்லவேண்டிய நிலைமை உள்ளது. கடந்தாண்டு பெய்த கன மழையின்போது ஏரி நிரம்பிவிட்டதால் கிராம மக்கள் ஊருக்கு வெளியே செல்லவும், மீண்டும் ஊருக்குள் வரவும் கடும் சிரமப்பட்டதுடன் வயல்வெளிகளில் உள்ள வரப்புகளை பயன்படுத்தி நடந்துவந்தனர். இதன் காரணமாக முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பெரிதும் தவித்து வந்தனர்.  இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு மக்கள் கொண்டு சென்றனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா உடனடியாக கிராமத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, கிராமத்தின் அருகே உள்ள விகேஎன்.கண்டிகை, அருந்ததி காலனி வழியாக சுமார் 2 கி.மீ. தொலைவிற்கு அரசுக்கு சொந்தமான வண்டிப்பாதை புறம்போக்கு நிலத்தின் வழியாக சாலை அமைக்க முடிவு செய்தனர்.  அதில் வளர்ந்திருந்த முட்புதர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி தற்காலிகமாக மண் சாலை அமைத்துக் கொடுத்தனர். மேலும் விரைவில் தார்ச்சாலை அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் கூறும்போது, ‘‘உடனடியாக இந்த பகுதியில் 23 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைப்பதற்கு கலெக்டர் ஒப்புதல் அளித்துள்ளார்’’ என்றார். எனவே, தங்களது பகுதிக்கு சாலை அமைக்க உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா ஆகியோருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு