கோயில் மாடுகளை காப்பகத்திற்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்ப்பு

 

புழல்: சென்னை புழல், காந்தி பிரதான சாலையில் பழமை வாய்ந்த திருமூலநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் வளாகத்தில் 21 மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இம்மாடுகளை உரிய முறையில் பராமரிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்று, 14 மாடுகளை லாரிகள் மூலம் சென்னை ஓட்டேரி, குன்னூர் சாலையில் உள்ள மாடுகள் காப்பகத்துக்கு அனுப்புவதற்காக பணி நேற்று நடந்துகொண்டிருந்தது.

அப்போது, திடீரென மாடுகளை லாரியில் ஏற்றுவதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, மாடுகளை ஏற்றிக்கொண்டிருந்த லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்ததும் புழல் போலீசாரும், மாதவரம் வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கிருந்த பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், கோயில் வளாகத்தில் மாடுகளை வளர்த்துக்கொள்வதற்கான அனுமதி பெற்று தருவதாக உறுதியளித்தனர். இச்சம்பவம் கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி