கோயில் நிலங்கள் முறைகேடு!: அதிகாரிகளை பொறுப்பாக்கும் கொள்கை மாற வேண்டும்..தமிழக அரசுக்கு ஐகோர்ட் வழிகாட்டுதல்..!!

சென்னை: கோயில் நிலங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு அதிகாரிகளை பொறுப்பாக்கும் வகையில், கொள்கை மாற்றம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளிட்ட 7 கோயில்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலங்களில், அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகள் மூலம் கொள்ளையடிக்கப்படுவதாக கூறி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இந்த நிலங்களை மீட்டு, கோயில்களின் செயல்பாட்டுக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் நிலங்களில் நடக்கும் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி, சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற மற்றும் சிவில் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டார். கோவில் நிலங்களில் சட்டவிரோத குவாரி நடக்கும் விவகாரத்தில் அரசு ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறிய விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கவும், கண்காணிக்கவும் அரசுத்துறைகளுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தார். உன்னதமான ஆன்மாக்கள், கோயில்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் சொத்துக்களை தானமாக வழங்கியுள்ளனர். கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். கோவில் சொத்துக்களை முறையாக பராமரிக்க தவறும் அதிகாரிகளை, இந்த குறைபாடுகளுக்கு பொறுப்பாக்க வேண்டும் எனவும், கோவில் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படாததால், அவை கொள்ளையடிக்கப்படுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். அதிக அளவில் முறைகேடுகளை அனுமதிப்பதன் மூலம் அரசு துறை தனது கடமையை தவறிவிட்டதால், அரசுத்துறை அதிகாரிகளை பொறுப்பாக்கும் வகையில் கொள்கை மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும், சொத்துக்களை மீட்பதுடன், வருவாய் இழப்பையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் வலியுறுத்தியுள்ளார்….

Related posts

மருத்துவ உபகரணங்கள், 100 படுக்கைகளுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ₹40 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

மாநகர பேருந்தில் ₹200 கொடுத்து டிக்கெட் கேட்ட பயணியை தாக்கிய கண்டக்டர்:  தாம்பரம் அருகே பரபரப்பு  சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

மாற்று மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட யூடியூபர் கைது