கோயில் திருவிழாவிற்கு சென்றபோது வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, பணம் கொள்ளை

வடலூர், பிப். 6: கோயில் திருவிழாவுக்கு சென்றபோது வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சந்தைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரத்தீஷ்(36). இவர் அபுதாபியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சவுமியா(24). இவர்களுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆன நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் இருப்பதால் சவுமியா தனது குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி மாலை 6 மணி அளவில் சவுமியா அவரது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் கோ.சத்திரத்தில் உள்ள கன்னியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்றனர். திருவிழா முடிந்து நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் வீடு திரும்பினர்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் செயின், மோதிரம், தோடு என 8 பவுன் மற்றும் வெள்ளி கொலுசு, வெள்ளி குங்குமச்சிமிழ் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கை ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். கொள்ளை போன நகைகள், பணம், வெள்ளிப்பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும். மேலும் சவுமியா கொடுத்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது