கோயில் இடத்தகராறில் 2 பேருக்கு கத்திக்குத்து

சுரண்டை, மார்ச் 4: சுரண்டை அருகே கலிங்கப்பட்டியில் பழமையான மாடசாமி கோயில் உள்ளது. இக்கோயிலைச் சேர்ந்த வரிதாரர் ஒருவர் வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் கோயில் புறம்போக்கு நிலத்தில் உள்ளது, அதனை அளக்க வேண்டும் எனுபுகார் மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோயில் வரிதாரர் இரு பிரிவினர்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு கைகலப்பானது. இதில் ஒரு பிரிவைச் சேர்ந்த குமாரவேல் என்ற செல்வம் (57), தன்னை சிலர் தாக்குவதாக தனது நண்பரான முன்னாள் ராணுவ வீரர் பூரணசந்திரனுக்கு போன் செய்து அழைத்துள்ளார்.

உடனே அவர், கத்தியுடன் வந்து எதிர் தரப்பைச் சேர்ந்த பிச்சையா மகன் மாடசாமி (35), பால்துரை மகன் சுரேஷ் (41) ஆகியோரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் மாடசாமிக்கு வயிற்றின் மேல் பகுதியிலும், சுரேசுக்கு இடதுபுற நாடியிலும் கத்தியால் குத்தியதில் காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த வீ.கே.புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்த மாடசாமி, சுரேஷ் ஆகிய இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய முன்னாள் ராணுவ வீரர் பூரணசந்திரன், குமாரவேல் என்ற செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்