கோயில் அன்னதான நிகழ்ச்சியில் குழம்பில் தவறி விழுந்து இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாப பலி

தோகைமலை, ஆக. 20: தோகைமலை அருகே ஆர்டிமலை கரையூரான் கோயிலில் நடந்த மாபெரும் அன்னதான நிகழ்ச்சியில் பரிமாறும் போது குலம்பில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் நேற்று இறந்தார். திருச்சி மாவட்டம் சோம்பரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு பகுதி அம்மாசி தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் மகன் பார்த்திபன் (24). இவர் சென்ட்ரிங் கூலி வேலை செய்து வந்து உள்ளார். இவர் கடந்த 13ம் தேதி அன்று கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்டிமலை பகுதியில் உள்ள கரையூரான் நீலமேகம் கோயிலில் நடந்த ஆடி 28ம் நாள் பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் பார்த்திபன் கோயிலில் நடந்து கொண்டு இருந்த அன்னதான பந்தலுக்கு சென்று அன்னதானம் பாிமாறும் வேலையை செய்து கொண்டு இருந்தார். அப்போது சாதம் எடுப்பதற்காக பார்த்திபன் சென்றார். அங்கு சாதத்தை எடுத்துக்கொண்டு செல்லும் போது பார்த்திபன் நிலை தடுமாறி அருகில் இருந்த குழம்பு அண்டாவில் விழுந்தார்.

உடனடியாக அருகில் இருந்த இளைஞர்கள் பார்த்திபனை தூக்கி வெளியில் கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பார்த்திபனின் தந்தை ரவிக்குமார் தோகைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பார்த்திபனுக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை