கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் டெங்கு தடுப்பு மருத்துவ முகாம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

 

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் மற்றும் மழையினால் ஏற்படும் தொற்றுநோய்கள் ஆகியவை பரவுவதை தடுக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் நாள்தோறும் மாநகராட்சி பணியாளர்களால் வீடுகள்தோறும் சென்று கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும் களப்பணியாளர்கள் மூலமாக களஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து, அவற்றை அழித்து, பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் பிற நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், சாலை மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட வாகனங்களில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்புள்ள காரணத்தினால் அவற்றை அகற்றும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதனை, ஆணையர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும், மார்க்கெட் வளாகத்தில் உள்ள தேவையற்ற பொருட்கள், குப்பை கழிவுகளை அகற்றும் பணிகளையும் பார்வையிட்டார். பின்னர், உதயம் திரையரங்கின் அருகில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று இருந்த கைவிடப்பட்ட வாகனத்தினை அகற்றும் பணியினைப் பார்வையிட்டு, தீவிரத் தூய்மைப் பணியின் கீழ், அங்கு தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுவதையும் ஆய்வு செய்தார். கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், தலைமை பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) மகேசன், மாநகர நல அலுவலர் ஜெகதீசன், மண்டல அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை