கோயம்பேடு மார்க்கெட்டில் காணாமல்போன 2 வயது சிறுமியை 1 மணி நேரத்தில் மீட்ட போலீசார்: கண்ணீர் மல்க பெற்றோர் நன்றி

அண்ணாநகர்: சென்னை பாடி ராஜா தெருவை சேர்ந்தவர் மேகநாதன்(43). இவர் அந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். தினமும் அதிகாலையில் குடும்பத்துடன் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றார். வழக்கம்போல் நேற்று அதிகாலை 5 மணி அளவில், குடும்பத்துடன் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க வந்தபோது தனது 2 வயது மகள் இவரை ஓரிடத்தில் அமரவைத்துவிட்டு தம்பதி காய்கறிகள் வாங்க சென்றுவிட்டனர். காய்கறிகள் வாங்கிவிட்டு அவர்கள் வந்தபோது மகளை காணவில்லை என்றதும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கோயம்பேடு காய்கறி, பழம்,  பூ மற்றும் உணவுதானியம் மார்க்கெட்டுகளில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.இதுபற்றி கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட  போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது காணாமல்போன சிறுமி கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வெளியே நடந்து செல்வது பதிவாகி இருந்தது.  இதையடுத்து அங்குள்ள பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த சிறுமி இவயை பத்திரமாக மீட்டு காவல்நிலையம் அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஒரு மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்டு கொடுத்த போலீசாருக்கு கண்ணீர்மல்க பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.இதுசம்பந்தமாக வியாபாரிகள் கூறுகையில், ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் இரவு நேரத்தில் வழிப்பறி, குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மார்க்கெட் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும் என்று அனைத்து வியாபாரிகளும் அங்காடி நிர்வாக அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். இதன்படி அங்காடி நிர்வாகம் 200க்கும் மேற்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்களை அனைத்து மார்க்கெட்டிலும் பொருத்தியுள்ளது. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நாளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டில் வழிப்பறி, செல்போன் பறிப்பு, ரவுடிகள் அராஜகம், குழந்தைகள் கடத்துவது  தடுக்கப்பட்டுள்ளது. எனவே சிறுமியை மீட்டு கொடுத்த போலீசாருக்கும் கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து கொடுத்த அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்திக்கும் வியாபாரிகள் சார்பாக பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றனர்….

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை