கோயம்பேடு மார்க்கெட்டில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி: போலி முகவரியை கொடுத்ததால் தேடி கண்டுபிடிப்பதில் சிக்கல்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில், இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையின்போது அவர்கள் போலியான முகவரி மற்றும் தவறான  செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு சென்றால், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பரவ  தொடங்கியதால், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனோ தொற்று அதிகளவில் பரவியதால்,  மார்க்கெட் மூடப்பட்டது. அங்கிருந்த காய்கறி கடைகள் திருமழிசைக்கும், பழக்கடை மற்றும் பூக்கடைகள் மாதவரத்திற்கும் மாற்றப்பட்டு, பல்வேறு விதிமுறைகளுடன் கடைகள் செயல்பட்டன. இந்நிலையில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சமீபத்தில்  கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது, கொரோனாவின் இரண்டாம் அலை மீண்டும் பரவி வருவதால், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதேபோல், கோயம்பேடு மார்க்கெட் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து முகவரி, செல்போன் எண்கள் பெறப்பட்டு வருகிறது. அவ்வாறு கடந்த 11ம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி தொழிலாளிகள், வியாபாரிகள்,  வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு  கொரோனா ரத்தசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் வெளியானதில், 2 பேருக்கு கொரோனோ இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் அவர்கள், கொடுத்த செல்போன் நம்பரை தொடர்ந்து   தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. முகவரியும் போலியாக இருந்ததால் தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட அந்த 2 பேர் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியாமலும், அவர்களை மீட்டு மருத்துவமனையில்  சேர்க்க முடியாமலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். கொரோனா உறுதி செய்யப்பட்ட இருவரையும் கண்டுபிடித்து தருமாறு மாநகராட்சி சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதார துறை அதிகாரிகள், சம்மந்தப்பட்டவர்களிடம் சரியான முகவரியை பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாளொன்றுக்கு ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், தங்களை  மீண்டும் 15 நாட்கள் தனிமைப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் பரிசோதனை எடுத்துக் கொள்ளும் நபர்கள் போலியான முகவரி மற்றும் போலியான செல்போன் எண்ணை கொடுத்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது.தற்போது, கொரோனா உறுதி செய்யபட்ட இருவர் தவறான முகவரி கொடுத்துள்ளதால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பி ஒடிய கொரோனா நோயாளிகளை கோயம்பேடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.ஜஏஎஸ் அதிகாரி  விழிப்புணர்வு கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி  போடும் முகாமை மார்க்கெட் வளாகத்தில் உள்ள மினி கிளினிக்கிள் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சிஎம்டிஏ  அதிகாரி கோவிந்தராஜ் ஆகியோர் கடந்த 11ம் தேதி துவக்கி வைத்தனர். 3 நாட்கள் ஆகியும் 200 பேர் மட்டுமே இங்கு கொரோனா தடுப்பு ஊசி போட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சென்னை பெருநகர ஐஏஎஸ் சுஞ்சோங்கம் ஐடக் சிரு  கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா தடுப்பு ஊசி போடும் பணியை  ஆய்வு செய்தார். அப்போது, அவர் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டு, தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் தைரியமாக இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள  வேண்டும், என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்