கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகாலையில் பட்டாக்கத்திகளுடன் சுற்றிய 6 பேர் கைது: பீதியில் பயணிகள் அலறி அடித்து ஓட்டம்

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகாலையில் பட்டா கத்திகளுடன் சுற்றித்திரிந்த சிறுவன் உள்பட 6 பேர் கும்பலை போலீசார் சினிமா பாணியில் விரட்டி சென்று சுற்றிவளைத்து கைது செய்தனர். பட்டா கத்திகளுடன் சுற்றிய கும்பலை கண்ட பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் சென்னை கோயம்பேடு பேருந்துநிலையம். இங்குள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், வெளி மாவட்டங்கள் மற்றும் மற்ற மாநிலங்களுக்கும் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருவதால் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். இங்கு கூட்ட நெரிசல் மற்றும் வெளியூர் பயணிகளை குறிவைத்து வழிப்பறி, செயின், செல்போன் பறிப்பு, பிக்பாக்கெட், லேப்டாப் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பேருந்து நிலையத்தில் குற்ற சம்பங்களை தடுக்க கூடுதலாக போலீசார் நியமித்து மாறுவேடத்தில் காலை மற்றும் இரவு நேரத்தில் ரோந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக, குற்ற சம்பவங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் 6 பேர் கொண்ட கும்பல் பட்டாக் கத்திகளுடன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுற் றிவருவதை பார்த்து கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். பயணிகள் பதற்றமாக ஓடுவதை கண்ட மாறுவேடத்தில் இருந்த போலீசார் பார்த்து, என்ன பிரச்னை என்று கேட்டபோது 6 பேர் கொண்ட கும்பல் பட்டாக்கத்திகளுடன் சுற்றி வருவதை கண்டு ஓடுவதாக கூறினார்கள். உடனே பணியில் இருந்த போலீசார் ஆய்வாளர் குணசேகரன் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் கூடுதலாக போலீசாரை அனுப்பி வைத்தார்.போலீசார் பஸ் நிலைய வளாகம் முழுவதும் சுற்றி வளைத்தபோது போலீசாரை பார்த்தும் கத்தியுடன் தப்பி சென்ற 6 பேரை சினிமா பாணியில் விரட்டிச் சென்று சுற்றிவளைத்து மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில், சென்னை வடபழனி பஜனை கோயில் தெருவை சேர்ந்த இம்ரான் (எ) லோகு (19), வேல்முருகன் (18), தமிம் அன்சாரி (19), ஹரி (எ) அசிர் (19) மற்றும் ஒரு சிறுவன், பெரியபாளையம் பகுதியை சேர்ந்த அபி (எ) வாதராஜன் (21) ஆகிய 6 பேர் பேருந்து நிலையத்திற்கு கத்தியுடன் வந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 5 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்தனர். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகாலையில் பட்டாக்கத்திகளுடன் சுற்றித்திரிந்த 6 பேர் கும்பலால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எழும்பூர், வளசரவாக்கம், மதுரவாயல் ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேர் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு

நீட் வினாத்தாள் விற்பனை முறைகேடு: மேலும் 2 பேரை கைது செய்தது சிபிஐ

விழுப்புரம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை