கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு: ரூ.100 முதல் 200 வரை கூடுதலாக வைத்து விற்பனை

சென்னை: ரம்ஜான் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால்,  கோயம்பேடு மார்க்கெட்டில் கனகாம்பரம் உள்ளிட்ட பல பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக ரூ.100 முதல் 200 வரை கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு மதுரை, வேலூர், ஓசூர், சேலம், திண்டுக்கல், மதுரை, நிலக்கோட்டை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் 30 முதல் 40 லாரிகளில் மல்லிகை, சாமந்தி, கனகாம்பரம் மற்றும்  சாக்லேட் ரோஸ் என பலவிதமான பூக்கள் வருகின்றன. இவற்றை வாங்க இளம்பெண்கள், சிறு வியாபாரிகள் என பல தரப்பினர் ஆர்வமுடன் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஈகை பெருநாளான ரம்ஜான் இன்று மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி,  கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம்  ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.400 முதல் 500 வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் அதே விலை நீடித்தது. நேற்று முன்தினம் ரூ.240க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லி, ரூ.50 அதிகரித்து, நேற்று காலை ரூ.300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.  ஒரு கிலோ பன்னீர் ரோஸ் ரூ.60க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.80க்கும், சம்பங்கி ரூ.90க்கும், சாமந்தி ரூ.160க்கும் அரளி பூ ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு குறித்து, கோயம்பேடு பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் மூக்காண்டி கூறுகையில், ‘‘ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்பட்டது. ஒரு கிலோ ரூ.240க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ ரூ.300 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இந்த பண்டிகை நாள் முடிந்த பிறகு பூக்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.’’ என்றார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்