கோபி அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசுமாட்டின் தாடை கிழிந்தது

கோபி : கோபி அருகே உள்ள பங்களாப்புதூர் அண்ணாநகரில் நாட்டு வெடிகுண்டை கடித்த பசுமாட்டின் தாடை கிழிந்து உயிருக்கு போராடி வருகிறது. இது தொடார்பாக போலீசார் 2 பேரை கைது செய்தனர்.கோபி அருகே உள்ள பங்களாபுதூர் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (27). இவர், தனது தோட்டத்தில் வளர்த்து வந்த பசு மாட்டை தோட்டத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு உள்ளார். சிறிது நேரத்தில் குண்டு வெடிக்கும் சத்தமும், மாடு பயங்கரமாக அலறும் சத்தமும் கேட்டு உள்ளது.இதனை அறிந்த மதன்குமார், மாடு மேய்ந்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, மாட்டின் தாடை கிழிந்து ரத்தம் கொட்டியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மதன்குமார் பங்களாப்புதூர் போலீசாரிடமும், டி.என்.பாளையம் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தார்.போலீசார் விசாரணை நடத்தியதில் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாட வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டை கடித்ததில், மாட்டின் தாடை கிழிந்து ரத்த காயம் ஏற்பட்டது தெரியவந்தது.நாட்டு வெடிகுண்டை, மக்காசோளத்திற்குள் வைத்து இருந்ததும், அதை கடித்ததாலேயே வெடித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நாட்டு வெடிகுண்டை வன பகுதியில் வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.இதில், கொண்டப்பநாய்க்கன் பாளையத்தை சேர்ந்த சடையப்பன் மகன் மகேஷ்வரன் (37), எருமைக்குட்டையை சேர்ந்த நடராஜ் (59) என தெரியவந்தது. இருவரையும் பிடிக்க பங்களாபுதூர் எஸ்ஐ குருசாமி தலைமையிலான போலீசார் அண்ணாநகர் சென்றனர்.போலீசாரை கண்டதும் மகேஷ்வரனும், நடராஜனும், தப்பியோட முயன்றனர். அவர்களை விரட்டிச்சென்ற போது, கையில் வைத்து இருந்த பையில் இருந்து நாட்டு வெடிகுண்டை எடுத்து காட்டி, அருகில் வந்தால் நாட்டு வெடிகுண்டை வீசிவிடுவோம் என மிரட்டி உள்ளனர்.இருப்பினும், போலீசார் துணிச்சலுடன் இருவரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த பையை பிடுங்கி பார்த்த பொது, அதில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக 38 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரிய வந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்ததுடன், இருவர் மீதும் தடை செய்யப்பட்ட வெடிபொருளை கொண்டு செல்லுதல், சட்டவிரோதமாக வெடி பொருள் வைத்து இருத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மகேஷ்வரன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இதேபோன்று வீட்டில் நாட்டு வெடிகொண்டு வைத்திருந்ததாக சத்தியமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது….

Related posts

கைகளை சுத்தமாக கழுவ மாணவர்களுக்கு செயல்விளக்கம் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால் சமுதாயம் சிறப்பாக இருக்கும்

கூடலூர் ஊராட்சி கண்ணூத்துமடையில் 100 நாள் திட்டத்தில் குளங்கள் அமைக்கும் பணி

கரூர் மாவட்டத்தில் 5,077 மெ.டன் ரசாயன உரம் இருப்பில் உள்ளது