Thursday, June 27, 2024
Home » கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜென்டினா சாம்பியன்

by kannappan

ரியோ டி ஜெனீரோ,: கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜென்டினா அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியனாகி சாதனை படைத்தது. தென் அமெரிக்க நாடுகளுக்கிடையே நடந்து வந்த இந்த தொடரின் பரபரப்பான பைனலில், நடப்பு சாம்பியன் பிரேசில் – அர்ஜென்டினா அணிகள் நேற்று மோதின. தலைசிறந்த வீரர்களும் நண்பர்களுமான லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), நெய்மர் ஜூனியர் (பிரேசில்) இருவரும் இப்போட்டியில் எதிரிகளாகக் களமிறங்கியதால், இந்த போட்டிஉலக அளவில் கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.அதற்கேற்ப, ரியோ மரக்காணா ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் அனல் பறந்தது. தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்து விளையாடிய அர்ஜென்டினா வீரர்கள், பிரேசில் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். 22வது நிமிடத்தில் டி பால் பந்தை அற்புதமாக பாஸ் செய்ய, துடிப்புடன் செயல்பட்ட ஏஞ்சல் டி மரியா பிரேசில் வீரர்களை சமாளித்து முன்னேறியதுடன் கோல் கீப்பரின் தலைக்கு மேலாக பந்தை தூக்கி அடித்து வலைக்குள் திணித்தார். இடைவேளையின்போது அர்ஜென்டினா 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் பிரேசில் அணி பதில் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இரு அணி வீரர்களுமே அதிக தவறுகள் செய்ததால், நடுவரால் எச்சரிக்கப்பட்டு ‘மஞ்சள் அட்டை’ வாங்கினர். மெஸ்ஸி ஏற்படுத்திக் கொடுத்த சில அருமையான வாய்ப்புகளை அர்ஜென்டினா வீரர்கள் வீணடித்தனர். பிரேசில் தரப்பில் நெய்மர் மேற்கொண்ட முயற்சிகளும் பலிக்கவில்லை. காயங்களால் நேர்ந்த நேர இழப்பை சரிக்கட்டும் வகையில் கூடுதலாக வழங்கப்பட்ட 5 நிமிடத்திலும் கோல் ஏதும் விழாதததால், அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி 15வது முறையாக கோபா அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த அணி கடைசியாக 1993ல் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.28 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கோப்பையை முத்தமிட்ட அர்ஜென்டினா வீரர்கள் ஆனந்தக் கூத்தாட, பிரேசில் அணியினர் அதிர்ச்சியில் உறைந்ததுடன் நெய்மர் உள்பட பல வீரர்கள் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி அழுதனர். அதே சமயம், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த மெஸ்ஸியை அர்ஜென்டினா வீரர்கள் அலாக்காக தூக்கிப்போட்டு கொண்டாடினர்.சாம்பியன் அர்ஜென்டினாவுக்கு முதல் பரிசாக ரூ.47 கோடியும், 2வது இடம் பிடித்த பிரேசில் அணிக்கு ரூ.25 கோடியும் வழங்கப்பட்டது. நட்பின் இலக்கணம்பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக 2013-17 வரை இணைந்து விளையாடிய மெஸ்ஸி, நெய்மர் இருவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். நேற்றைய ஆட்டத்தில் பிரேசில் அணி தோற்றதால் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் தேம்பி அழுத நெய்மர், பின்னர் தன்னை தேற்றிக் கொண்டு மெஸ்ஸிக்கு வாழ்த்து தெரிவித்தார். இருவரும் கட்டியணைத்தபடி சில நிமிடங்கள் அப்படியே அமைதியாக நின்றது, அவர்களின் நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது.7000 ரசிகர்கள்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இறுதிப் போட்டியை காண 7,000 ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதிலும் பெரும்பாலானோர் பிரபலங்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆவர்.கை கூடிய கனவுஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடிய ஆட்டங்களில் திறமையை நிரூபித்து, உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக மெஸ்ஸி முத்திரை பதித்திருந்தாலும்… தாய்நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் அவர் என்ன சாதித்தார்? என்ற கேள்வியை பலரும் முன்வைத்து விமர்சித்து வந்தனர். கோபா அமெரிக்கா, உலக கோப்பை கால்பந்து தொடர்களில் அவரால் அர்ஜென்டினா அணிக்காக கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது மிகப் பெரிய குறையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில்தான், பிரேசில் அணியை வீழ்த்தி கோபா அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலமாக அந்த விமர்சனங்களுக்கு மெஸ்ஸி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.கொல்கத்தாவில் கொண்டாட்டம்லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோபா அமெரிக்கா தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதை, கொல்கத்தாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். கால்பந்து விளையாட்டின் மீது பேரார்வம் கொண்ட கொல்கத்தா ரசிகர்களுக்கு, அர்ஜென்டினா நட்சத்திரங்கள் மரடோனா, மெஸ்ஸி என்றாலே தனி அன்பும் அபிமானமும் பொங்கி வழியும். இந்த 2 நட்சத்திரங்களும் கொல்கத்தா நகருக்கு விஜயம் செய்து கால்பந்து போட்டியில் விளையாடி உள்ளதும் அதற்கு முக்கிய காரணம். 2011ல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, வெனிசுவேலா அணியுடன் மோதிய நட்பு ரீதியிலான சர்வதேச போட்டி சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடந்தது. மெஸ்ஸியின் ஆட்டத்தை நேரில் காணக் கிடைத்த அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது என்கின்றனர் கொல்கத்தா ரசிகர்கள். பிரேசில் அணிக்கு எதிராக நேற்று அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றதும் தாரை தப்பட்டை முழங்க கொல்கத்தா வீதிகளை அவர்கள் தெறிக்கவிட்டனர்.வரிசை கட்டிய விருதுகள்!* நடப்பு தொடரில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி, லூயிஸ் டயஸ் (கொலம்பியா) சமநிலை வகித்தாலும் (தலா 4 கோல்), சக வீரர்கள் கோல் அடிக்க மெஸ்ஸி 5 முறை உதவியிருந்ததால் தங்கக் காலணி விருது அவருக்கே வழங்கப்பட்டது.* தொடரின் சிறந்த வீரர் விருதை மெஸ்ஸி மற்றும் நெய்மர் பகிர்ந்துகொண்டனர். இந்த தொடரில் அர்ஜென்டினா அடித்த 12 கோல்களில் 9ல் மெஸ்ஸியில் பங்களிப்பு இருந்தது. நெய்மர் 2 கோல் போட்டதுடன் சக வீரர்கள் 3 கோல் அடிக்க உதவியிருந்தார்.* சிறந்த கோல்கீப்பருக்கான ‘தங்கக் கையுறை’ விருதை அர்ஜென்டினா அணியின் எமிலியானோ மார்டினஸ் தட்டிச் சென்றார். பைனல் உள்பட இந்த தொடரின் 4 ஆட்டங்களில்அவர் ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காமல் அசத்தினார். அரையிறுதியில் கொலம்பியா அணிக்கு எதிராக பெனால்டி ஷூட் அவுட்டில் அவர் 3 வாய்ப்புகளை தடுத்தது ஹைலைட்டாக அமைந்தது.* இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக வெற்றி கோல் அடித்த ஏஞ்சல் டி மரியா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.* தொடர் முழுவதும் ஒழுக்கத்துடன் விளையாடி விதிமுறைகளை சிறப்பாகக் கடைப்பிடித்ததற்கான ‘ஃபேர்பிளே’ விருது பிரேசில் அணிக்கு வழங்கப்பட்டது….

You may also like

Leave a Comment

1 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi