கோடை வெயில் அதிகரிப்பு எதிரொலிமுட்டை விலை தொடர்ந்து சரிவு

நெல்லை, ஏப். 12: கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் முட்டை விலை வேகமாக குறைந்து வருகிறது. நேற்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ.4.50க்கு விற்கப்பட்டது. தமிழ்நாட்டில் முட்டை அதிகமாக உற்பத்தியாகும் பகுதியாகவும், நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் சந்தையாகவும் நாமக்கல் திகழ்கிறது. முட்டை உற்பத்தி மற்றும் தேவைக்கு ஏற்ப விலை ஏற்ற, இறக்கமாக உள்ளது. இங்கிருந்து தமிழகம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் முட்டை விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. குளிர் காலங்களில் வட மாநிலங்களில் முட்டை நுகர்வு அதிகமாக இருக்கும். இதனால் அந்த நாட்களில் விலை வேகமாக உயரும். மாறாக கோடை காலங்களில் வடமாநிலங்களில் முட்டை நுகர்வு குறைவதுடன் வெயிலுக்கு தாக்குப் பிடிக்காமல் முட்டையும் விரைவில் கெட்டு விடும். இதனால் கோடை காலங்களில் இதன் விலை குறைவது வழக்கம்.

தற்போது கோடை வெயில் கொளுத்துவதாலும், முட்டை நுகர்வு குறைவதாலும் இதன் விலை தற்போது தமிழகத்தில் வேகமாக குறைந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு முட்டை விலை ரூ.5.30 என இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் ஒரு முட்டை ரூ.5க்கு விற்கப்பட்டது. இந்த விலை நேற்று மேலும் சரிந்து ஒரு முட்டை ரூ.4.50 என விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ஒரே நாளில் 50 பைசா குறைந்துள்ளது. அடுத்த சில தினங்களுக்கு இந்த விலை நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். முட்டை விலை சரிவதால் ஏழை, நடுத்தர மக்கள் முட்டை வாங்குவதை அதிகரித்துள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை