கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறப்பு மாலையுடன் நடனமாடியபடி வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்: ♦ நுழைவாயிலை இழுத்து பூட்டினார் முதல்வர்♦ 4 பேர் கத்திகளுடன் கைது

சென்னை, ஜூன் 20: சென்னையில் கோடை விடுமுறை முடிந்து நேற்று அனைத்து கலைக்கல்லூரிகளும் திறக்கப்பட்டன. குறிப்பாக 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கியது. அதேநேரம் முதல் நாள் என்பதால் பச்சையப்பன், மாநில கல்லூரி, நந்தனம், புதுக்கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல பிரச்னை நடைபெறும் என்றும், இதனால் கல்லூரி மாணவர்களிடையே ேமாதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை போலீசாருக்கு தகவல் வந்தது. இதை உறுதி செய்யும் வகையில், நேற்று காலை புது வண்ணாரப்பேட்டை டோல்கேட் பேருந்து நிலையம் பகுதியில் நேற்று காலை 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கூட்டமாக நின்றுகொண்டு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

அதற்கு பஸ் டே கொண்டாடுவதற்காக போட்டோ எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளனர். அவர்களை சோதனை செய்தபோது கத்திகள் இருந்தது. எனவே, 4 பேரையும் போலீசார் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள், மாநில கல்லூரியில் படிக்கும் தாம்பரம் அண்ணா நகர் 2ம் ஆண்டு பிகாம் மாணவன் பாலாஜி (18), பொன்னேரி என்ஜிஓ நகர் 2ம் ஆண்டு பிஎஸ்சி மாணவன் இசக்கியல் எட்வின் (18), பொன்னேரி பனப்பாக்கத்தைச் சேர்ந்த 2ம் ஆண்டு பிஏ மாணவன் ஜனகன் (18), திருவள்ளூர் கவரப்பட்டை பகுதியைச் சேர்ந்த 2ம் ஆண்டு பிஎஸ்சி மாணவன் குணசேகரன் (19) என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் முதல்நாள் வகுப்புக்குச் சென்றபோதுதான் கத்திகளை வைத்துள்ளனர். மேலும் இந்த கத்திகளை எங்கிருந்து வாங்கினீர்கள் என்று கேட்டதற்கு, தங்கள் கல்லூரியில் படிக்கும் 2ம் ஆண்டு மாணவர்களான திலீப், பூவின், ரவி ஆகியோரிடம் வாங்கியதாக தெரிவித்தனர். அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்ற கல்லூரி மாணவர்களுடன் இவர்களுக்கு மோதல் உள்ளதா அல்லது பஸ் டே கொண்டாடும்போது கத்தியைச் சுற்றி ரீல்ஸ் எடுக்க வைத்திருந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதை தொடர்ந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மெரினா காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி, ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி, நந்தனம் பகுதியில் உள்ள நந்தனம் கலைக்கல்லூரி என சென்னை முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் முன்பு அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டது. ரூட் தல பிரச்னையில் ஏற்கனவே சிக்கிய மாணவர்களை போலீசார் அடையாளம் கண்டு அவர்களை தீவிர சோதனை செய்த பிறகே கல்லூரிக்குள் அனுமதித்தனர். அதேநேரம், பாரிமுனையில் இருந்து கோயம்பேடு சென்ற 15 மாநகர பேருந்தை வழிமறித்து 50க்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேனர் மற்றும் மாலையுடன் கல்லூரி முன்பு வந்தனர். பிறகு மாணவர்கள் அனைவரும் ‘பச்சையப்பாஸ் கு ஜே’ என கோஷம் எழுப்பியபடி, கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பச்சையப்பர் சிலைக்கு மாலை அணிவிக்க நடனமாடியபடி வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சம்பவம் குறித்து கல்லூரி முதல்வருக்கு தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த கல்லூரி முதல்வர், கல்லூரியின் நுழைவாயில் கேட்டை இழுத்து மூடி பூட்டி சாவியை எடுத்துக் ெகாண்டு சென்றுவிட்டார். இதனால் பச்சையப்பன் கல்லூரி அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்