கோடை மழை காரணமாக பருத்தி சாகுபடி இழப்பிற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திருவாரூர், ஜூன் 26: கோடை மழை காரணமாக பருத்தி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் மாநில பொது செயலாளர் மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காவேரி டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு பருத்தி செடிகள் பூக்கும் காலம் முதல் பருவம் தவறிய மழை விட்டு விட்டு பெய்தால் தண்ணீர் தேங்கி பல இடங்களில் செடிகள் அழுகிகாய்ந்தன. காய்ந்த செடிகளின் பாதிப்பை மட்டும் தமிழக அரசு கணக்கீட்டு நிவாரணம் கொடுத்திட அறிவித்துள்ளது. ஆனால் பூக்கள் காய்கள் கொட்டியதால் பெருமளவு பாதிக்கப்பட்டது தான் அதிகம். ஆனால் அரசின் நிவாரண கணக்கீட்டில் இதை சேர்க்கவில்லை. இந்நிலையில் எஞ்சிய பருத்தியினை விற்பனைக்கு கொண்டு வந்தால் அதைவிட பெரும் சிரமங்கள் ஏற்படுகிறது.

கடந்த 2022&-23ம் ஆண்டில் சராசரியாக கிலோ ஒன்றுக்கு ரூ 120 விலை கிடைத்தது. கடந்தாண்டு 2023-24ல் கூட சராசரி ரூ 70 அளவில் விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தற்பேது சராசரியாக ரூ 55 தான் கிடைக்கிறது. இந்நிலையில் நடப்பாண்டு பருத்தி விலையாக ஒன்றிய அரசு குவிண்டால் ரூ. 7 ஆயிரத்து 121 மற்றும் ரூ.7ஆயிரத்து 521 என நிர்ணயித்துள்ளது. இந்திய பருத்தி கழகத்தின் முகவர்கள் கொள்முதலுக்கு சரியாக வராததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு வந்தாலும் பருத்தி கொள்முதல் செய்யாது ஒதுங்கிக் கொள்வதால் வியாபாரிகள் கூட்டு சேர்ந்து தங்கள் விருப்பத்திற்கு விலையை நிர்ணயிக்கிறார்கள். ஒன்றிய அரசு நிர்ணயத்துள்ள விலை விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டுமெனில் பருத்திக்கழகம் கொள்முதல் செய்தால் தான் போட்டி ஏற்பட்டு உரிய விலை கிடைக்கும்.

மேலும் நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை வழங்குவதை போன்று தமிழக பருத்தி விவசாயிகளின் நடப்பாண்டு பாதிப்பை கவனத்தில் கொண்டு பருத்திக்கும் ஊக்கத்தொகையினை தமிழக அரசு அளித்திட வேண்டும் என்பதுடன் திருவாரூரில் ழுங்குமுறை விற்பனை கூடத்தில் கணினி தராசு இருந்தும் அதை பயன்படுத்தாது எடை கல்தராசுகளை கையால்வதால் எடை மோசடி நடப்பதாக விவசாயிகள் தெரிவிகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மாசிலாமணி தெரிவித்துள்ளார்.

Related posts

போதைப்பொருள் விற்பனை செய்வதில் தகராறு 2 நண்பர்கள் கழுத்தறுத்து கொடூர கொலை: 4 பேர் கும்பலுக்கு வலை

திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் திரைப்படத் தயாரிப்பு பயிற்சி பட்டறை

திருமணத்துக்காக வந்து தங்கியபோது பெரியம்மா வீட்டில் 28 சவரன் அபேஸ்: இளம்பெண் மீது புகார்