கோடை போல் கொளுத்தும் வெயில் பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

விகேபுரம் : கோடை போல் கொளுத்தும் வெயிலால் பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு விடுமுறைதினமான நேற்று அதிக அளவில் படையெடுத்து வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேற்குத் தொடர்ச்சி  மலைப்பகுதியில் நெல்லை மாவட்டம், பாபநாசம் அருகே ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. கோடை போல் தற்போதே வெயில் கொளுத்தி வரும் நிலையில் விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் இங்கு படையெடுத்து வந்து ஆசை தீர குளித்து செல்கின்றனர். குறிப்பாக குற்றாலம் அருவிகளில் தற்போது சீசன் இல்லாத நிலையில் தண்ணீர் வரத்தும் குறைந்து போனதால் சுற்றுலாப்  பயணிகள் அனைவரும் பாபநாசம் அகஸ்தியர் அருவி நோக்கி படையெடுத்து வந்த வண்ணம்  உள்ளனர். விடுமுறை நாளான நேற்று (13ம் தேதி) ஏராளமான சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவிக்கு செல்ல குவிந்தனர். பாபநாசம் வன சோதனைச்சாவடியில் பலத்த சோதனைக்கு  பிறகு அவர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் சிலரிடமிருந்து மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்  பொருள்களை வனத்துறையினர் பறிமுதல்  செய்து அழித்தனர்.அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு  வனத்துறையினர் தலா ரூ.30 வீதம் வசூலிக்கின்றனர். சிறிய ரக  வாகனங்களுக்கு ரூ.50, பஸ்களுக்கு ரூ.100, பைக்குகளுக்கு  ரூ. 20ம் வீதம் வசூலித்து வருகின்றனர். ஆனால், அகஸ்தியர் அருவிக்குச் செல்லும் சாலை முறையான பராமரிப்பின்றி படுமோசமான நிலையிலேயே உள்ளது. மருந்துக்குக்கூட இதை பராமரிக்க மறுக்கும் அதிகாரிகள், வாகனங்களுக்கும், ஆட்களுக்கும் கட்டணம் வசூலிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், மலைச்சாலையில் அசம்பாவிதம் நடக்கும் முன்பாக, சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க முன்வர  வேண்டும்  என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்….

Related posts

காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 13ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

பல மாதங்களாக முடங்கி கிடந்த சோழிங்கநல்லூர்-சிறுசேரி மெட்ரோ பணிகள் மீண்டும் தொடங்கின

வரும் 23ம் தேதி தாக்கல் செய்யவுள்ள ஒன்றிய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி கிடைக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு