கோடை என்னும் வசந்த காலம்!

நன்றி குங்குமம் தோழி கோடைகாலத்தில் தகிக்கும் சூரியக் கதிர்களால் மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிர்களும் அவதியுறும் என்பது இயற்கை. அந்த சமயத்தில் மனிதர்களாகிய நாம் நம்முடைய  உடல்நலத்தையும் அதன் தட்பவெப்பத்தையும் சரியான விகிதத்தில் பேணிக்காப்பது அவசியம். கோடை விடுமுறை என்பது ஒரு மாத கால விடுமுறை என்பதால் அந்த நேரத்தில் தான் சுற்றுலா செல்ல திட்டமிடுவார்கள். அதில் பெரும்பாலானோர், குளிர்ந்த பிரதேசங்களை நாடுவார்கள். ஒரு சிலர் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். கோடை விடுமுறையினை இந்த நேரத்தில் மேற்கொள்ள விரும்புபவர்கள் பின்பற்றக்கூடிய வழிமுறைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். வெளியூர்களுக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் முதலில் தாங்கள் உடுத்தும் உடை மீது கவனம் கொள்ள வேண்டும். நீங்கள் செல்லும் இடம் குளிர் பிரதேசமாக இல்லாமல் இருந்தால், அங்கு எளிமையான காட்டன் ஆடைகளை பயன்படுத்துவது நல்லது. இறுக்கமான ஆடைகளை தவிர்த்து விடவேண்டும். தளர்ந்த பேன்ட், ஷர்ட்டுகளை அணியலாம். வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் வியர்வையை வெளியேற்றும் விதமாக காலணிகளை அணிந்தால் உடலில் சூடு ஏறாமல் இருக்கும். வெளியே செல்லும் போது கண்களுக்கு கூலிங் கிளாஸ் மற்றும் சூரிய ஒளியில் இருந்து சருமத்தினை பாதுகாக்க, சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்தலாம். அதனால் இவற்றை எல்லாம் கண்டிப்பாக உடன் எடுத்து செல்வது அவசியம். ஒரு சிலர்தான் ரயில், பேருந்தில் செல்வார்கள். மற்றவர்கள் தங்களின் கார் அல்லது டிராவல்சில் வண்டியினை புக் ெசய்து செல்வார்கள். எந்த வழியாக பயணம் மேற்கொண்டாலும், பயணத்தின் போது, சாலையோர கடைகளில் உணவு உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. எண்ணெய் சேர்த்த, வறுத்த உணவுகளை எடுத்துக் கொண்டால் நீர்ச்சத்து குறைபாடு உண்டாவதுடன் வாயு தொல்லையும் ஏற்படும். அதற்கு பதில் குளிர்ச்சி தரக்கூடிய வெள்ளரி, தர்பூசணி, நுங்கு, இளநீர் போன்ற நீர்ச்சத்துள்ளவற்றை சாப்பிடலாம். மேலும் நாம் அன்றாடம் வீட்டில் சாப்பிடக்கூடிய மிதமான சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல் போன்ற சைவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவில் அதிக அளவு காரம் இருப்பதால், பயணத்தின் போது வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.சில சமயம் சுற்றுலா செல்லும் இடத்தில் சாப்பிடும் உணவால் அலர்ஜியோ அல்லது அந்த இடத்தின் சீதோஷ்ணநிலை ஒத்துக் கொள்ளாமல் போகலாம். அதனால் எப்போது பயணம் மேற்கொண்டாலும், கையில் அலர்ஜி மாத்திரை, ஜுரம் மற்றும் சளிக்கான மாத்திரை, காயம் ஏற்பட்டால் அதற்கு போட மருந்து அல்லது பாண்ட்டெயிட் போன்ற முதலுதவி மருந்துகளை உடன் எடுத்துச் செல்வது மேலும், நீர்ச்சத்து குறைபாட்டை தீர்க்கும் எலெக்ட்ரால் பாக்கெட்கள் மற்றும் அஜீரணத்தை போக்கும் ஈனோ போன்றவற்றையும் கொண்டு செல்லுங்கள். கார், பேருந்து, விமானம், ரயில் போன்றவற்றில் பயணம் மேற்கொள்பவர்கள்  தமக்கு ஏற்ப வசதியான  விரும்பிய தலையணையை கொண்டு சென்றால் பயணத்தில் அலுப்பு தெரியாமல் இருக்கும். காரில் பயணம் செய்பவர்கள் பயணத்தின் போது, ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுத்துவிட்டு சென்றால் நல்லது. உடல் சோர்வை போக்க பிடித்தமான இடத்தில் நிறுத்தி இயற்கையை ரசித்து விட்டு உற்சாகமாக பயணத்தை தொடருங்கள்.பயணத்தின் போது எவ்வாறு சில விஷயங்களை கவனமாக மேற்கொள்ள வேண்டுமோ அதேபோல் உணவு மற்றும் நம் உடல் சார்ந்த விஷயம் மீது தனி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.*பயணத்தின் போது, குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் தண்ணீரை தவிர்ப்பது நல்லது. சாதாரண தண்ணீர் குடிக்கலாம். அதுவே வீட்டில் இருக்கும் போது, நம் பாரம்பரியமான மண்பானை தண்ணீரை பருகலாம். இது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். மண்பானை இல்லாத பட்சத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து அதில் சிறிதளவு மல்லிகைப்பூவை சேர்த்து அந்த தண்ணீரை பருகலாம். தண்ணீர் வாசனையாகவும் இருக்கும், அதே சமயம் உடலுக்கும் குளிர்ச்சியினை அளிக்கும். ஆனால் இந்த நீரை அதிகம் பருகுவதால் சளி பிடிக்க வாய்ப்புண்டு. அதனால் வாரம் ஒரு முறை இதனை கடைப்பிடிக்கலாம். *கோடைகாலத்தில் நமது உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும். இதனால் நம் உடலில் ஓடும் ரத்தத்தில் உயிரிழப்பு ஏற்படலாம். இதனை தவிர்க்க சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரை அடிக்கடி பருக வேண்டும். *கோடைகாலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் வியர்க்குரு, சிறு கட்டிகள் போன்றவை வர வாய்ப்புண்டு. இதனை தவிர்க்க அரைத்த சந்தனத்தை  உடலில் நன்கு பூசிக்கொள்ளலாம்.*கோடையில் குளிர்சாதன அறையில் இருக்க மனசு ஏங்கும். அதற்கு பதில் வீட்டில் மரங்கள் இருந்தால் கோடை காலத்தில் நமது மனம் நிழலை தேடுவது இயல்பு. எப்போதும் குளிர் சாதன அறையிலே இல்லாமல் நிழல் மற்றும் மருத்துவ குணம் கொண்ட வேப்பம் மற்றும் புங்க மரங்களின் நிழல்களில் இளைப்பாறலாம். இப்போது வாழும் அப்பார்ட்மென்ட் வாழ்க்கையில் மரங்களை எங்கே தேடுவது என்று நினைப்பவர்கள், வீட்டு பால்கனியில் சின்ன தோட்டம் அமைத்து மாலை நேரத்தில் அங்கு அமரலாம். உடலும் மனமும் புத்துணர்வு கொள்ளும்.பொதுவாக வெயில் காலத்தில் நம் உடலின் வெப்பநிலையும் அதிகரிக்கும். அப்போது மூளையில் இருக்கும் ஹைப்போதலாமஸ் வியர்வையை சுரக்கச் செய்து, உடலின் வெப்பநிலையை உடலில் இருந்து வெளியேற்றும். ஆனால் அக்னி நட்சத்திரத்தின் போது, வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஹைப்போதலாமஸ் தன் செயல்பாட்டை இழந்து, உடல் வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் போகும். அந்நேரத்தில் தான் வியர்க்குரு, வேனிற்கட்டிகள், சிறுநீர்க்கடுப்பு, அக்கி  என பல வெப்ப நோய்கள் ஏற்படுகிறது. மேலும் அதிகமாக வெயில் அடிக்கும் போது, உடலின் வெப்பநிலை 106 டிகிரியாக உயர்ந்து, உடல் சோர்வு, அதிகப்படியான தண்ணீர் தாகம், மயக்கம், தலைச்சுற்றல் போன்றவை ஏற்படும். இதனுடன் சோடியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற உப்புக்கள் வெளியேறுவதாலும் உடல் சோர்வு ஏற்படும். அதனால் தான் பலர் வெயில் நேரத்தில் மயங்கி விழுவார்கள். உடலில் உள்ள  ரத்த நாளங்கள் விரிவடைந்து, இடுப்பிற்கு கீழே ரத்த ஓட்டம் அதிகரித்து, இதயத்தில்  ரத்த அழுத்தம் குறைந்து, மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தத்தின் அளவை குறைக்கும். இந்த நிலை ஏற்பட்டால், உடனே பாதிக்கப்பட்டவரை காற்றோட்டமுள்ள இடத்தில் வைத்து, ஆடையை தளர்த்தி, குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்க வேண்டும். கோடையில் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது, வியர்வை அதிகம் வெளியேறுவது போன்றவற்றால், உடலில் நீர்ச்சத்து குறைந்து, சிறுநீர் வெளியேறும் அளவும் குறையும். அப்போது சாதாரணமாக காரத்தன்மையுடன் இருக்கும் சிறுநீர் அமிலத்தன்மைக்கு மாறி, சிறுநீர்க்கடுப்பு ஏற்படும். மேலும் சிறுநீர் வழியாக வெளியேற வேண்டிய உப்புக்கள் சிறுநீர்ப்பாதையில் படிந்து, சிறுநீரக கல்லாகிவிடும். எனவே இவற்றை தவிர்க்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். வாயு நிரப்பப்பட்ட பானங்களை குடிப்பதை தவிர்த்து, இளநீர், மோர், சர்பத், பதநீர் போன்றவற்றை குடித்து வந்தால், கோடையில் வியர்வையின் மூலம் உடலில் இருந்து வெளியேறிய சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாது உப்புக்கள் கிடைத்து, சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு உடலின் வெப்பநிலையை பராமரிக்க உதவும். எலுமிச்சை சாற்றில் சர்க்கரை அல்லது உப்பு கலந்து குடித்து வந்தால், நீரிழப்பால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் உடனடியாக குறையும். தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை, கொய்யா, பப்பாளி, கிர்ணிப் பழம், நுங்கு போன்றவற்றை தவறாமல் வாங்கி சாப்பிட வேண்டும். கம்மங்கூழ், தயிர் சாதம், மோர் சாதம், இட்லி, இடியாப்பம், கீரைகள், வாழைத்தண்டு, புடலங்காய், கேரட், பீட்ரூட் போன்றவையும் உட்கொள்ளலாம் குறிப்பாக கோடை காலத்தில் உணவில் காரம் மற்றும் மசாலா வகைகளை குறைத்துக் கொள்வது நல்லது.தொகுப்பு: பிரியா மோகன்

Related posts

நுண்ணூட்டச் சத்துகளில் அடங்கி உள்ளது ஆரோக்கியம்!

உன்னத உறவுகள்-நெருக்கம் காட்டும் உறவுகள்

தொகுப்பாளர் முதல் பெண் தொழில்முனைவோர் வரை!