கோடை இறவை சாகுபடியில் பருத்தியில் மொட்டு, பூ, காய் உதிர்வை தடுப்பது எப்படி: வேளாண்மை அதிகாரிகள் ‘டிப்ஸ்’

அருப்புக்கோட்டை: கோடை இறவை பருத்தியில் பூ, மொட்டு, காய் உதிர்வை தடுத்து அதிக மகசூல் பெறுவது குறித்து அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபாபு, வாசுதேவநல்லூர் தங்கப்பழம், வேளாண்மை கல்லூரி முதல்வர் ராமலிங்கம் ஆகியோர் வழங்கியுள்ள ஆலோசனை வருமாறு:விருதுநகர் மாவட்டத்தில் கோடைப் பட்டத்தில் நெல் தரிசு பகுதியிலும், அதிக பருத்தி மகசூல் எடுக்க வாய்ப்புள்ளது. இந்த பருவத்தில் இரவு நேர வெப்பம் அதிகமாக இருப்பதாலும், அடிக்கடி நீர் பாய்ச்சுவதாலும், செடி வளர்ச்சி அதிகமாகிறது. இதனால், பக்கவாட்டில் வளர வேண்டிய காய்களின் வளர்ச்சி குறைந்து பூ, மொட்டு, காய்கள் உதிர ஆரம்பித்து மகசூல் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க பொதுவாக எல்லா பருத்தி ரகங்களிலும், செடி பருவம் 45 நாட்கள் வரை நீடிக்கும். அதன்பின் பூ, மொட்டுக்கள் தோன்ற ஆரம்பித்து பூக்க ஆரம்பிக்கும். விதைத்த 55ம் நாளில் எல்லாச் செடிகளிலும் பூக்கள் தோன்றி விடும். பருத்தி பயிருக்கு அதிக தழைச்சத்து, உரமிடுவது, அதிகமாக நீர் பாய்ச்சுவது ஆகிய காரணங்களால் பருத்தி செடியில் கடைசி பருத்தி எடுப்பிக்குப் பின்பும் பூக்கள் தோன்றும்.விதைத்த 100 நாள் வரை மட்டுமே பூக்க வேண்டும். பருத்தி விதைத்த 75 நாட்களுக்கு பின்பு மேல் உரம் இடுவதை தவிர்க்க வேண்டும். இதனால், ஊட்டச்சத்துக்கள் பூ மற்றும் காய்களுக்கு செல்லாமல் செடி நுணுக்கி சென்று விடும். எனவே, பூக்கள், சப்பைகள் மற்றும் காய்கள் கொட்டுகின்றன. செடிகளில் தோன்றும் மொத்த பூக்களில் 50 சதவீதத்திற்கு மேல் கொட்டும்போது மகசூல் இழப்பு ஏற்படுகிறது. பருத்தி சாகுபடியில் 75வது நாளில் இருந்து 90 நாட்கள் வரை உள்ள பருவம் அதிகமாக பூக்கும் பருவம் ஆகும். இந்த பருவத்தில் மண்ணில் ஈரப்பதம் தடுக்கப்பட வேண்டும். அதற்காக அதிகமாக நீர் பாய்ச்சுதல் கூடாது. விதைத்த 75 நாட்களுக்கு பின் உரமிடுதல் கூடாது. அதிகமான தழை வளர்ச்சி தோன்றும்போது பூக்கள் கொட்ட ஆரம்பிக்கும். இதை கட்டுப்படுத்த 75 நாளில் செடியின் நுனியை கிள்ளிவிட்டு, நாப்தலின் அசிட்டிக் அமிலம் என்னும் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் திரவத்தை 40 பிபிஎம் என்ற அளவில் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி மருந்து) தெளிக்க வேண்டும்.இதனால், தளை வளர்ச்சி குறைந்து அதிகமான பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். நுனி வளர்ச்சி கட்டுப்படுவதால் அதிகமான ஊட்டச்சத்துக்கள் காய் கிளைக்கு சென்று பூக்கள் காய்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும். பின் விதைத்த 90வது நாளில் மீண்டும் ஒருமுறை பிளானோபிக்ஸ் தெளித்து செடி வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும். காய்களின் முதிர்ச்சி மற்றும் சீரிய பருத்தி வெடிப்பிற்கான சில நுட்பங்கள் காய்கள் சீராக பருமானவதற்கும், பூக்கள் தொடர்ந்து உண்டாவதற்கும் விதைத்த 75ம் நாளில் ஒரு முறையும். 90ம் நாளில் ஒரு முறையும் இரண்டு சதம் டிஏபி கரைசலை தெளிக்க வேண்டும். அல்லது காட்டன் பிளஸ் ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ 200 லிட்டர் தண்ணீரில் தெளிக்க வேண்டும். சாம்பல் சத்து குறைபாடு உள்ள நிலங்களில், பருத்தி முறையாக வெடிக்காது. இந்த குறையை நீக்க விதைத்த 90ம் நாளில் ஒரு சதம் பொட்டாஷ் கரைசலை தெளிக்க வேண்டும். காய்கள் பிடிக்கும் பருவத்தில் காய் புழுக்களை பொருளாதார சேதநிலை வரும்முன் கட்டுப்படுத்த வேண்டும். எனவே, விதைத்த 75ம் நாளிலிருந்து 90 நாட்களுக்குள் நுனி கிள்ளுதல், பிளானோபிக்ஸ் மற்றும் காட்டன் பிளஸ் தெளித்தால் கோடை இறவை பட்டத்தில் அதிக பருத்தி மகசூல் பெறுவது உறுதியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்….

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை மத்திய கோட்டம் அஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் காப்பீடு விற்பனை முகவர் பணிக்கு நாளை நேர்காணல்

வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் வைட்டமின் ‘ஏ’ வழங்க ஆகஸ்ட் 31ம் தேதி சிறப்பு முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்