கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் பிணை நிபந்தனைகளை மாற்றம் செய்து ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் பிணை நிபந்தனைகளை மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுக்க செல்லும் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டு, சில பொருட்கள் திருடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். கோடநாடு கொலை, கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்பட்ட கனகராஜ் என்பவர் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் வழக்கில் சாட்சியங்களை கலைத்து ஆதாரங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இருவருக்கும் கடந்த மாதம் பிணை வழங்கிய நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், உதகையிலேயே தங்கியிருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இந்நிலையில் உதகையில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரி இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, உதகையில் தங்க வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றியமைத்து மனுதாரர்கள் இருவரும் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15ம் தேதி மட்டும் சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் நீலகிரி நீதிமன்றத்திடம் அனுமதி பெறாமல் இருவரையும் காவலில் வைத்து விசாரிக்க கூடாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை