கொள்ளிடம் அருகே வேம்படி கிராமத்தில் குடிசை வீடு எரிந்து சாம்பல்

 

கொள்ளிடம், ஜூன் 18: கொள்ளிடம் அருகே வேம்படி கிராமத்தில் குடிசை வீடு எரிந்து சாம்பலானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவருக்கு எம்எல்ஏ பன்னீர் செல்வம் நிதி உதவி வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியைச் சேர்ந்த வேம்படி கிராமம் முத்தரையர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன்(65). இவரது குடிசை வீடு நேற்று திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீ விபத்தில் வீட்டிற்குள் இருந்த அனைத்து அத்தியாவசிய பொருட்களும் எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீ விபத்தில் வீட்டை இழந்த சுப்பிரமணியனுக்கு ஆறுதல் கூறி ரொக்கம் மற்றும் அத்யாவசிய பொருட்களை வழங்கினர். ஒன்றிய குழு உறுப்பினர் அங்குதன், ஊராட்சி செயலர் செந்தில் மற்றும் சத்யராஜ், முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு