கொளுந்து விட்டு எரிந்த குப்பை கழிவுகள்

பரமத்திவேலூர், ஜூலை 30: பரமத்திவேலூர் பேரூராட்சி 16வது வார்டு குடியிருப்பு பகுதியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த குப்பை கழிவுகளுக்கு தீ வைக்கப்பட்டதில் கொளுந்து விட்டு எரிந்து, கரிய புகை மூட்டம் பரவியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். பரமத்திவேலூர் பேரூராட்சி பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளின் ஒரு பகுதியை பரமத்தி சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி முறையாக அப்புறப்படுத்தப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும், பாசன வாய்க்கால் கரைகளிலும், பொதுக்கழிப்பிட கட்டிதங்கள் உள்ள பகுதிகளிலும் கொட்டி தீ வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களும், வணிகர்களும் பேரூராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலை உள்ளது.

இந்நிலையில், பேரூராட்சிக்குட்பட்ட 16வது வார்டு பகுதியான திருவள்ளுவர் சாலையில் இருந்து பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்லும் வழியில் உள்ள பொது கழிப்பிட பகுதியில் கடந்த சில நாட்களாக குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது. அதனை அப்புறப்படுத்த வழியின்றி நேற்று மாலை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் தீ மூட்டியதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் குப்பை கழிவுகள் மள மளவென கொளுந்து விட்டு எரிந்தது. இதனால், அப்பகுதியில் கரிய புகை மூட்டம் சூழ்ந்தது. புகை மூட்டத்தால அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள், சுற்றுப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். தீ பரவியதைக் கண்ட பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் தண்ணீர் விட்டு கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் சம்பவ இடத்திற்கு வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் பெராடி தீயை கட்டுப்படுத்தினர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து