கொளத்தூர் தொகுதியில் ஸ்கிரீனிங் பரிசோதனையுடன் கொரோனா சிகிச்சை மையம்: வடசென்னை மக்கள் வரவேற்பு

சென்னை: வடசென்னை பகுதிகளான கொளத்தூர், திருவிக நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனை, அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 2 வாரத்திற்கு முன்பு நோய் தொற்று அதிகரித்து காணப்பட்டதால், மருத்துவமனை வாசலில் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள் நிற்கும் நிலை ஏற்பட்டது. இதை போக்க வட சென்னையிலேயே கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் தொடங்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது.அதன்பேரில், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட டான்போஸ்கோ பள்ளியிலும், எவர்வின் பள்ளியிலும் சிகிச்சை மையங்கள் உருவாக்க உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன. அதன்படி, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட டான்போஸ்கோ பள்ளியில்  ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 75 படுக்கைகள் தயார் செய்யப்பட்டது. இதில் முதல் நாளிலேயே 40 கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்பெல்லாம் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று ஸ்கிரீனிங் எனப்படும் எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனை செய்து கொண்டுதான் மற்ற முகாம்களுக்கு செல்ல முடியும். ஆனால் தற்போது டான்போஸ்கோ பள்ளியில் எக்ஸ்ரே மற்றும் இரத்த பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தொற்று உறுதியானவர்கள் நேரடியாக இங்கு வந்து ஸ்கிரீனிங் செய்து கொண்டு ஆக்சிஜன் தேவை இருந்தால் அங்கேயே அட்மிட் ஆகலாம்.  இல்லை என்றால் கொரோனா சிறப்பு மையங்களுக்கு செல்லலாம். வீட்டில் வசதி இருப்பவர்கள் வீட்டில் இருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறலாம். இவ்வாறு பல வசதிகள் அங்கு செய்யப்பட்டுள்ளன. மேலும் இங்கு உள்ள கொரோனா நோயாளிகளுக்காக இரவோடு இரவாக ₹5 லட்சம் செலவில் கன்ெடய்னரில் அதிநவீன கழிப்பறை குளியல் வசதியுடன் கூடிய பாத்ரூம் வசதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் எவர்வின் பள்ளியிலும் கொரோனா  சிகிச்சை தொடங்க உள்ளன. அதுமட்டுமின்றி கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரியார் நகர் மருத்துவமனையில் ரூ.12 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு மருத்துவமனை திறக்கப்படவுள்ளது. அவ்வாறு அந்த மருத்துவமனை  திறக்கப்பட்டால் 300 நோயாளிகள் படுக்கை வசதியுடன் கூடிய  சிகிச்சை பெற முடியும்.  கொளத்தூர் தொகுதியில் அப்பகுதி மக்கள் வெளியே சென்று சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் இல்லாமல் தொகுதிக்குள்ளேயே  அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது .இதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை