கொளத்தூரில் கடன் பிரச்னையால் விபரீதம் விஷம் கொடுத்து தாய், தந்தை கொலை? மகன், மகள் மாயமானதால் பரபரப்பு

பெரம்பூர்: கொளத்தூரில் கடன் பிரச்னையால் குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்னையில், தாய், தந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதற்கிடையே, மகன், மகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொளத்தூர், பாலாஜி நகர், 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜூலு (62), பிரபல கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாரதி (59). தம்பதிக்கு பாக்கியலட்சுமி (40) என்ற மகளும், தினேஷ் (35) என்ற மகனும் உள்ளனர். இதில், பாக்கியலட்சுமிக்கு திருமணமாகி பிரகாஷ் என்ற கணவரும், ஹரிணி (18) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் பாண்டிச்சேரியில் வசித்து வந்தனர். தற்போது சென்னையில் உள்ள கல்லூரியில் ஹரிணிக்கு சீட் கிடைத்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன் குடும்பத்துடன் பெற்றோர் வீட்டில் வந்து தங்கியுள்ளனர்.  மகன் தினேஷ் கொளத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பாக்கியலட்சுமியின் கணவர் பிரகாஷ் இரவுநேர பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், இரவு 9 மணிக்கு, கடன் பிரச்னை தொடர்பாக, கோவிந்தராஜூலு, அவரது மனைவி பாரதி, மகள் பாக்கியலட்சுமி, மகன் தினேஷ் ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அனைவரும் தூங்க சென்று விட்டனர்.வேலை முடிந்து நேற்று அதிகாலை மருமகன் பிரகாஷ் வீட்டுக்கு வந்தபோது, மாமனார் கோவிந்தராஜூலு, மாமியார் பாரதி இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை எழுப்பியபோது, அசைவின்றி கிடந்தனர். இதனால் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். தகவலறிந்து கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அவர்களை பரிசோதனை செய்தபோது, இருவரும் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், வீட்டில் பாக்கியலட்சுமி மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் இல்லாததால், அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டபோது இருவரின் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர், போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது, பூச்சிக்கொல்லி மருந்து 2 பாட்டில்கள் இருந்ததும், அதில் ஒன்றை இவர்கள் சாப்பிட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, கடன் பிரச்னையில் தம்பதி பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை கொண்டார்களா அல்லது பெற்ற மகள் மற்றும் மகன் இருவரும் சேர்ந்து தாய், தந்தையருக்கு பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து விட்டு தப்பிச் சென்றார்களா அல்லது 4 பேரும் தற்கொலை செய்துகொள்ள நினைத்து முதலில் அவர்கள் இருவரும் சாப்பிட்டு, மற்ற இருவரும் வேறு மாதிரியான முடிவை எடுத்துள்ளார்களா என்ற பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மாயமான பாக்கியலட்சுமி மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். பாக்கியலட்சுமியின் மகள் ஹரிணி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாக்கியலட்சுமி, வீட்டில் இருந்த சாமி படத்தில் தனது தாலியை தொங்கவிட்டு சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  இதனால், பாக்கியலட்சுமி மற்றும் அவரது தம்பி தினேஷ் வேறு எங்காவது சென்று தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்….

Related posts

ரூ.2 கோடி கேட்டு மிரட்டிய வழக்கு மாணவனை கடத்திய மாஜி போலீஸ்காரர் கைது: மேலும் 4 பேருக்கு வலை

அயோத்திக்கு அழைத்து செல்வதாக 106 பேரிடம் ரூ.31 லட்சம் மோசடி: மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்தவர்கள் ஏமாற்றம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரிடம் விசாரணை 10 நாளாக நோட்டமிட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்: முக்கிய குற்றவாளியின் வங்கி கணக்கு ஆய்வு; பின்னணியில் யார் என போலீசார் தீவிர விசாரணை