கொளக்காநத்தம் அரசு பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை: ஒன்றியக்குழு தலைவர், ஊராட்சி தலைவருக்கு பாராட்டு

 

பாடாலூர், பிப். 10: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. தலைமையாசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ராகவன், துணைத் தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமையாசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சங்கீதா, ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். ஆண்டறிக்கையை ஆசிரியை புவனேஸ்வரி வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார். இவர் பள்ளி வளர்ச்சிக்காக நமக்கு நாமே திட்டத்துக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார். அதேபோல் ஊராட்சி மன்ற தலைவர் ராகவன் ரூ.50 ஆயிரம் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.

இதையடுத்து மாணவ, மாணவிகள் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர், பள்ளி தன்னார்வலர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கலைவாணன் நன்றி கூறினார். ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ண மூர்த்தியும், ஊராட்சி தலைவர் ராகவனும் அரசு பள்ளிக்கு தலா ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கியிருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்