கொல்லங்கோடு அருகே மதுபோதையில் தொல்லை கொடுத்ததால் பட்டதாரி மகனை அடித்து கொன்ற தந்தை காவல் நிலையத்தில் சரண்

நித்திரவிளை, ஜூன் 28: கொல்லங்கோடு அருகே தினசரி குடித்து விட்டு வந்து தொல்லை கொடுத்த மகனை அடித்துக் கொன்ற தந்தை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் சித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (73). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 2 மகன்கள் உண்டு. மூத்த மகன் ஜினு (36). முதுகலை பட்டதாரி ஆவார். திருமணமாகவில்லை. கேரள மாநிலம் உச்சக்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 6 மாதங்களாக ஜினு வேலைக்கு செல்லவில்லை. மேலும் மது போதைக்கு அடிமையாகி விட்டார். தினமும் இரவு குடித்து விட்டு வந்து தந்தையிடம் பிரச்னை செய்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவரது தம்பி இரவு நேரங்களில் வீட்டில் தங்காமல் உறவினர்கள் வீடுகளில் படுத்துக் கொள்வார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது போதையில் வந்த ஜினு தந்தையிடம் பிரச்னை செய்து உள்ளார். அப்போது தாக்குதலிலும் ஈடுபட்டு உள்ளார். இதனால் பயந்து போன செல்வராஜ் வீட்டை பூட்டி விட்டு உள்ளே இருந்துள்ளார். நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க செல்வராஜ் வெளியே வந்து இருக்கிறார். இதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த ஜினு தந்தையை மீண்டும் தாக்க முயன்றுள்ளார். ஆனால் செல்வராஜ் முந்திக் கொண்டு அருகில் கிடந்த தேங்காய் உரிக்கும் கம்பியால், மகன் ஜினுவின் தலையில் ஓங்கி அடித்து உள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஜினு ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் துடிதுடித்து ஜினு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நேற்று காலை செல்வராஜ் தனது மகனை அடித்துக் கொன்று விட்டதாக கூறி கொல்லங்கோடு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து ஜினுவில் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக செல்வராஜின் இளைய மகன் ஜிஜின் கொல்லங்கோடு காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சரண் அடைந்த செல்வராஜியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை அதிரடியாக கைது செய்தனர். குடி போதையில் தொல்லை கொடுத்த செய்த மகனை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் நித்திரவிளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு