கொரோனா 3 வது அலையை எதிர்கொள்ள தயார் குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ 3 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்

* அடுத்த வாரம் செயல்பட தொடங்கும்நாகர்கோவில் : கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் சுமார் ரூ 3 கோடியில் உருவாக்கப்பட்டு வரும் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அடுத்த வாரம் செயல்பட தொடங்கும் என தெரிகிறது. தமிழகத்தில் கொரோனா 2 வது அலை மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இளைஞர்கள் அதிகம் பேர் உயிரிழந்தனர். குறிப்பாக ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, நோயாளிகளை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.  ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாமல் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் ஆக்சிஜன் பற்றாக்குறை சரி செய்யப்பட்டது. தற்போது எல்லா மருத்துவமனைகளிலும் போதிய அளவு ஆக்சிஜன் உள்ளது. இந்த நிலையில் கொரோனா 3 வது அலை தாக்குதல் அதிகமாக இருக்கும் என்பதால், இதை தடுப்பதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆக்சிஜன் இருப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த வகையில், கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தேவையை சமாளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு ஏற்கனவே சுமார் 24  ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் நிரப்பகம் உள்ளது. தினமும் 4, 5 டன் வீதம் லோடு வந்த வண்ணம் உள்ளது. ஆக்சிஜன் தேவையும் குறைந்துள்ளது. இதனால் தற்போது சுமார் 20 ஆயிரம் லிட்டர் வரை ஆக்சிஜன் இருக்கிறது. இது தவிர அவ்வப்போது ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்களும் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் பி.எம். கேர் நிதியின் கீழ் தற்போது சுமார் ரூ 3 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்த உற்பத்தி மையம் செயல்படும் போது நிமிடத்துக்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும்.  இங்கிருந்து, நேரடியாக சிகிச்சை வார்டுகளுக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படும். இந்த பணிகள் முடிவடைந்து உள்ளதால், அடுத்த வாரத்தில் இருந்து இந்த உற்பத்தி மையம் செயல்பட தொடங்கும் என மருத்துவக்கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைப்பதற்கான பணிகளை நேற்று கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார். வேகமாக பணிகளை முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், 2 வது அலையின் தாக்குதல் மிகப் பெரிய சவாலாக இருந்தது. குறிப்பாக ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகளை சமாளிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. 2 வது அலையில் மட்டும் இரு மாதங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு ஆக்சிஜன் தேவையுடன் கூடிய சிகிச்சை அவசியமானது. தற்போது ஓரளவு பிரச்னை தீர்ந்துள்ளது. பரவல் வேகம் குறைந்து உள்ளதால், பாதிப்பு இல்லை. இதனால் ஆக்சிஜன் தேவை குறைந்து உள்ளது. ஆனால் 3 வது அலை தாக்குதலின் போது தேவை அதிகரிக்கும். தற்போது நிமிடத்துக்கு 1000 லிட்டர் உற்பத்தி மையம்  அமைக்கப்பட்டு உள்ளது. இது செயல்படும்பட்சத்தில் அவசர காலங்களில் ஓரளவு நிலைமையை சமாளிக்க முடியும். கொரோனா 2வது அலையின் போது நிமிடத்துக்கு 8000 லிட்டர், 10 ஆயிரம் லிட்டர் வரை தேவைப்பட்டன. எனவே ஆக்சிஜன் தேவை எப்போது எப்படி இருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றனர்….

Related posts

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாள மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு

சேலம் மாநகராட்சி முன்னாள் மண்டலக்குழு தலைவர் வெட்டிக்கொலை: தொழில் போட்டியா அல்லது முன்பகை காரணமாக என போலீஸ் விசாரணை