கொரோனா விதிமுறையை காற்றில் பறக்கவிட்டு கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்: மாமல்லபுரத்தில் தொற்று பரவும் அபாயம்

சென்னை: அரசு அறிவித்த கொரோனா விதிகளை மீறி மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அங்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா தொற்று இந்தியாவில் கடந்த ஆண்டு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கான தடுப்பூசி செலுத்தப்பட்டு  வந்தாலும், ஒருபுறம் தொற்று பரவல் பல்வேறு நாடுகளில் மீண்டும் அதிகரித்து  வருகிறது. தமிழகத்தில் சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று கடந்த மார்ச்  மாதம் முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை  பின்பற்றாமலும் பொது நிகழ்ச்சிகளில் கூட்டமாக கலந்து கொண்டதாலும் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால்  பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது. நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில்  மட்டும் 650 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனை தடுக்க மாவட்ட  நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு  வருகிறது. மேலும், கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியபோது,  மேற்கொள்ளப்பட்ட வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை, கண்காணிப்பு, வீடுகளில்  தனிமைப்படுத்துதல் போன்ற தடுப்பு பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய  மூன்று மாவட்டங்களில் சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும்  கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கூடுவதற்கு தடை  விதித்துள்ளது. ஆனால், அதை மீறி 100க்கும் மேற்பட்ட  சுற்றுலா பயணிகள் நேற்று காலை மாமல்லபுரம் கடற்கரையில் திரண்டனர். இதில், ஒருவர்  கூட முகக்கவசம் அணியவில்லை. மேலும், சமூக இடைவெளியின்றி கடற்கரையில் குவிந்தனர். இங்கு வந்த சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகமோ,  மாமல்லபுரம் காவல் துறையோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிப்பதாகவும், இதனால் மாமல்லபுரம் பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை