Monday, July 1, 2024
Home » கொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன?

கொரோனா.. நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன?

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் உலகம் முழுவதும் பீதியுடன் உச்சரிக்கப்படும் பேசுபொருளாகிவிட்டது கொரோனா. மருத்துவர்கள் பல்வேறு பாதுகாப்பு ஆலோசனைகளைச் சொல்லி அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கமோ யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறது. நோய் பரவக் கூடாது, எந்த உயிரிழப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எல்லோரின் விருப்பமும். ஆனால், இந்த கொரோனா விஷயத்தில் நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள் என்ன என்பதையும் சற்று கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த வைரலாஜிஸ்ட் ஜேக்கப் ஜான் கூற்றுப்படி, ‘நமது சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கவில்லை’ என்று குற்றம் சாட்டுகிறார். அதனால்தான் உலக நாடுகளில் பன்றிக்காய்ச்சல் இறப்பு விகிதம் 1000 பேரில் ஒருவர் என இருக்க, இந்தியாவில் அது 1000 பேரில் 50 பேர் என மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் நோய் மேற்பார்வை, கண்டுபிடிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் மிகக் குறைவு என்பது வேதனையான விஷயம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பரவி அவர்கள் விடுப்பில் செல்லும் நிலைதான் இங்கு இருக்கிறது. டெல்லியில் 152 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் அரசு உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாதிப்பில் இருந்து தப்பித்திருக்க முடியும். அதை ஏன் அரசு தவறவிட்டது என்ற கேள்வியும் எழுகிறது. கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை இல்லை, தடுப்பூசி மருந்துகளோ கிடையாது எனும்போது, நோய்த் தடுப்பு நடவடிக்கை மட்டுமே ஒரே தீர்வாக இருக்கிறது. வேறு வழி இல்லை. இந்த நிலையில் தமிழக முதல்வர், ‘இங்குள்ள மருத்துவர்கள் தடுப்பு மருந்து கண்டுபிடித்து உலகத்துக்கே முன்னுதாரணமாக இருங்கள்’ என்கிறார். நல்ல விஷயம்தான். ஆனால், மருத்துவத்துறைக்கு போதிய நிதி ஒதுக்காமலேயே மருத்துவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பது எப்படி நியாயம்?! பயணங்கள் மேற்கொள்ளப்படும் இடங்களில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சந்தேகிக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால், தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்கும் வசதியே சென்னை விமான நிலையத்தில் இல்லை. 2014-ம் ஆண்டில் மத்திய அரசு அனுமதி கொடுத்தபின்பும் கூட, தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்கும் எந்த மருத்துவ கட்டிடமும் விமான நிலையத்தில் இதுவரை கட்டப்படவில்லை. கட்டடம் கட்டுவது சுகாதாரத்துறையின் பொறுப்பா அல்லது விமானத்துறையின் பொறுப்பா என்ற குழப்பத்தில் 6 ஆண்டுகளாகியும் முடிவு எட்டப்படவில்லை. எப்போதெல்லாம் சுகாதார நெருக்கடி நாட்டிற்கு வருகிறதோ அப்போது ‘தேசிய நெருக்கடி மேலாண்மை குழு’ அமைப்பு ஒன்று கூடி மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். இதை ஆரம்ப கட்டத்திலேயே செயல்படுத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இதை செயல்படுத்தும் உத்தேசம் இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. மாநில அரசுகளோடு சமூக அமைப்புகளையும் இணைத்து செயல்படுமானால் சிறப்பாக இருக்கும். காற்றின் மூலம் கீழே படிவதாலும், தொடுவதாலும், இருமல், தும்மல் மூலமாகவும்(Air Droplets), மலம் மூலமாகவும், கண் மூலமாகவும்(Conjunctival surface) பரவுவதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஹாங்காங்கில் பாதிக்கப்பட்ட பெண்மணியிடமிருந்து அவரின் செல்ல நாய்க்கும் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படி கொரோனா வைரஸ் புதுப்புது தன்மைகளை கொண்டுள்ளது. இந்தியாவின் வெப்ப சூழல் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் எனும் கருத்து நிலவி வந்தாலும் ஜேக்கப் ஜான் போன்ற வைராலஜிஸ்ட்டுகள் அதை முற்றிலும் மறுக்கின்றனர். ஏனெனில், சிங்கப்பூரில் இந்த வைரஸ் பரவியதிலிருந்து இங்கும் அது பரவும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது என்று அவர் தெளிவாக கூறுகிறார். ஆக, வெப்ப சூழல் இந்த வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தாது என்பதே உண்மை. இந்த வைரஸ் பற்றி முழுமையாக புரிந்து கொண்ட பின்னரே உரிய நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வந்தவரை மட்டுமல்லாது, வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து வழி பயணிகளிடமும் முழுமையான பயண வரலாற்றை அனைவரிடமுமே கேட்டறிந்து சோதனை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதை தேசிய, மாநிலம், மாவட்டம், ஊரகத்துறை மட்டங்கள் வரையிலும், மக்களுடன் இணைந்து தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவின் செயல்பாட்டை கொண்டு சென்றால் மட்டுமே பணியை முழுமையாக செய்ய முடியும். சென்னையில் 25 சதவீத மக்களிடம் மட்டுமே கொரோனா வைரஸ் திரையிடல் சோதனை(Screening test) செய்திருக்கிறார்கள். ஆட்கள் பற்றாக்குறையை காரணமாக சொல்கிறார்கள். முக்கிய மூன்று அறிகுறிகளான தொண்டை வலி, காய்ச்சல், மூச்சுத் திணறல்களை மட்டுமே பார்க்கிறார்கள். 2 வாரங்கள் முதல் 3 வாரங்கள் வரை மட்டுமே தனிமைப்படுத்துகிறார்கள். ஆனால், உலகளவில் 1 மாதத்திற்குப் பிறகும் தெரிவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும், சில வேளைகளில் ஆரம்பத்தில் நெகடிவ் முடிவாக இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு பாசிடிவ் முடிவு வருகிறது. Infrared gun-ஐ நெற்றியில் வைத்து காய்ச்சலை அளவிடுகிறார்கள். சில நேரங்களில் இதில் துல்லியமான டெம்பரேச்சரை காண்பிப்பதில்லை. அதனால் காய்ச்சலை மட்டுமே அளவுகோலாக எடுத்துக் கொண்டு அந்த நோயாளிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது. வெப்பத்தை அளக்கும் கருவியின் முனைக்கும், நெற்றித் தோலுக்கும் 3 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும். இல்லையேல் முடிவுகள் மாறி வரும். ஆக அதை கண்காணிக்க தமிழக அரசு குழு ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும். சிலருக்கு அறிகுறிகள் இல்லாமலும் கூட, தொற்று இருக்க வாய்ப்பிருக்கிறது.கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்து, நெகடிவ் முடிவு காண்பித்தாலும், CT Lung ஸ்கிரீனிங்கை அளவுகோலாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. GGA(Ground Grass Appearance) நுரையீரலின் அடிப்பகுதியில் மற்றும் வெளிப்பகுதியில்(Periphery) வைரஸ் தொற்று இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே CT Lung ஸ்கிரீனிங்கையும் கட்டாயமாக செய்ய வேண்டும். அடுத்ததாக ஒரு இடத்தில் மட்டும் மாதிரியை; எடுக்காமல்(உதாரணமாக ரத்த மாதிரி, மூக்கு, தொண்டை, மலவாய், மூச்சுக்குழல் (Bronchus) போன்ற பல இடங்களிலும் மாதிரிகள் எடுத்து சோதனைக்குட்படுத்துவதை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. காரணம் இறுதிக்கட்டத்தில் வாயிலிருந்து எடுக்கும் மாதிரி நெகடிவ் காண்பித்தாலும், மலவாய் பகுதியில் எடுக்கும் மாதிரி பாசிடிவ் முடிவு தெரிவிக்கிறது.எனவே எல்லா இடங்களிலும் மாதிரிகள் எடுத்து(குறிப்பாக மலவாய்); சோதனை செய்தும், மூலக்கூறு ஆய்வுகளையும் 2 முறை செய்த பின்னர்தான் நோயாளியை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். ஏனெனில், மூலக்கூறு ஆய்வுகள் 50 சதவீதம் வரை நோய்த்தாக்கம் இருந்தும் சரியாக காண்பிக்கவில்லை என தெரிய வந்துள்ளது. தென் கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் Re-Positivity இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது முதலில் பாசிடிவ்வாகவும், அடுத்து நெகடிவ் காண்பித்து, மீண்டும் பாசிடிவ் முடிவை காண்பிக்கிறது. எனவே 2, 3 முறை துல்லியமாக மாதிரிகள் எடுத்து ஆய்வு மேற்கொள்வது மிக மிக முக்கியம்.‘அரசு எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மையையும், அறிவியல் ஆய்வுகளின் மூலமாக எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டுவதையும், சிகிச்சையையும் பின்பற்ற வேண்டியது மிக அவசியம்’ என்பதை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. நோய் தடுப்பில் முக்கிய சவால் என்னவெனில் சமூக பரிமாற்றம்(Community Transmission)தான். அதாவது, பாதிக்கப்பட்ட ஒருவர் நோய் பரவியிருக்கும் இடத்திற்கு பயணம் செய்யாமல் இருந்தும், மற்றும் நோய் பாதிக்கப்பட்டவர்களோடு நெருங்கிய தொடர்பில் இல்லாமல் இருந்தும், அவருக்கு நோய் தொற்றி இருப்பதுதான். ஏனெனில் அதை எளிதாக கண்டுபிடிக்க முடியாது. மேலும், நோய் அறிகுறிகள் இல்லாதபட்சத்தில் அவர் மூலம் பிறருக்கு நோய் பரவும் வாய்ப்பு இருப்பதும் நோய் தடுப்பை சிக்கலாக்குகிறது.தற்போது இந்தியா முழுவதும் 13 அரசு வைராலஜி லேப்புகளுக்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். தமிழ்நாட்டில் ஒன்றுதான் இருக்கிறது. சென்னை உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கான மருத்துவ ஆய்வுகளை தீவிரப்படுத்த வேண்டும். உலகில் 40 முதல் 50 சதவீத மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கிறார்கள். ஆனால், உரிய நோய்மேற்பார்வை/கண்டுபிடிப்பு/தனிமைப்படுத்தல்/தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மூலம் காப்பாற்ற முடியும்’ என்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் வைரலாஜிஸ்ட் சொல்லும் கூற்றை எடுத்துக் கொண்டால், நம் நாடு அனைத்து மட்டங்களிலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மக்கள் என அனைத்து தரப்பினருடனும் இறங்கி செயல்பட வேண்டும்.தொகுப்பு: உஷா நாராயணன்

You may also like

Leave a Comment

10 + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi