கொரோனா தொற்று அதிகரிப்பால் நடவடிக்கை கடுமையாகிறது விதிகளை மீறினால் திருமண மண்டபங்கள் தியேட்டர்களின் லைசென்ஸ் ரத்து-நெல்லை கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை

நெல்லை : தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருவதால் கோவிட்  தொற்று விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. நெல்லையில் அரசின் வழிகாட்டு  நெறிமுறைகளை மீறினால் திருமண மண்டபங்கள், தியேட்டர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என கலெக்டர் விஷ்ணு எச்சரித்துள்ளார்.தமிழகத்தில்   ஒமிக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது கொரோனாவின் 3வது  அலை  பரவியதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து நேற்று முதல் இரவு நேர   ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.  இந்நிலையில்  நெல்லை மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், நகைக் கடைகள்,  தியேட்டர் ஆகியவற்றின் உரிமையாளர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்  நேற்று காலை கலெக்டர் விஷ்ணு ஆலோசனை நடத்தினார். அப்போது கலெக்டர்  பேசியதாவது:ஒமிக்ரான்  பரவல் தமிழகத்தில் அதிவேகமாக உள்ளது. பொதுவாக தொற்று இரட்டித்தல் என்பது  400 நாட்கள் கால இடைவெளியாகும். ஆனால் இந்த முறை எதிர்பார்ப்பை விட அதிகமாக  24 மணி நேரத்தில் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. இதை முன்னிட்டு  தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. எனவே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வணிக நிறுவனங்கள்,  தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் அனைத்திலும் அரசு அறிவித்துள்ள  வழிகாட்டு நெறிமுறைகளை உரிமையாளர்கள் மிகவும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.  திருமணங்களுக்கு  100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும். தியேட்டர்களில் 50 சதவீதம் பேரை  மட்டுமே அனுமதிக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் ஒரே சமயத்தில் 50 சதவீதம்  வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் அனைவரும்  முககவசம் அணிந்து வருவதை உறுதி செய்வது அந்தந்த கடை நிறுவன உரிமையாளர்களின்  பொறுப்பாகும். அனைத்து நிறுவனங்களிலும் வாசலில் தெர்மல் ஸ்கேனிங்  செய்வதுடன் சானிடைசர் வைத்திருக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களிலும்  ஊழியர்கள் 100 சதவீதம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதி  செய்யவேண்டும். இது தொடர்பாக கடை வாசலில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.கடை ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். இந்த  விதிமுறைகளை மீறி செயல்பட்டால், அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் தான் முழு  பொறுப்பேற்க வேண்டும். முன்பு போல் அபராதம் விதித்தல், எச்சரிக்கை போன்றவை  இம்முறை கிடையாது. இதையே எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். விதிமுறைகளை  மீறும் திருமண மண்டபங்கள், தியேட்டர்களின் லைசென்ஸ் ஆகியவை ரத்து செய்யப்படும்.  வணிக நிறுவனங்கள் விதிமுறைகளை மீறினால், எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி  கடையை மூடி சீல் வைக்கப்படும்.எனவே விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக  அமல்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.  ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்று காலை 7 மணி முதல்  இரவு 10 மணி வரை ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படும். அன்று பால், பத்திரிகை விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும்  அனுமதிக்கப்படும். எனவே வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும்  விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தொற்று பரவலை எளிதாக எடுத்துக் கொள்ள  வேண்டாம். வருகிற நாட்கள், பண்டிகை நாட்கள் என்பதால் தொற்று,  கிராமங்களில் இருந்து வருபவர்கள் மூலம் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அரசின்  வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.கூட்டத்தில்  மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன், மாநகர போலீஸ் துணை கமிஷனர்  சுரேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், நெல்லை  ஆர்டிஓ சந்திரசேகர், சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் வெங்கட்ரங்கன்,  துணை இயக்குநர் கிருஷ்ணலீலா, மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், கலெக்டரின்  நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அசோக்குமார், வேளாண் விற்பனைத்துறை துணை  இயக்குநர் முருகானந்தம், உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) அருணாசலம்,  உளவுப்பிரிவு உதவி கமிஷனர் நாகசங்கரன், தாசில்தார்கள் தங்கராஜ்,  ஹபிபூர்ரஹ்மான், நெல்லை சண்முகசுப்பிரமணியன், மானூர் சுப்பு மற்றும்  வியாபாரிகள் பங்கேற்றனர்….

Related posts

சுற்றுலா மற்றும் பண்பாடு சார்ந்த பல்வேறு துறைகளின் நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 85% கூடுதலாக பதிவு..!!

உதகையில் புதிய தொழில் நிறுவனம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்