கொரோனா டெஸ்ட் மூலம் கல்லா கட்டிய சுகாதார துறை அதிகாரி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘இலை ஆட்சியில் அவசர கோலத்தில் உருவாக்கப்பட்ட புது மாவட்டத்தில் மாஜி அமைச்சர் ஒருவர் மீது பயனாளிகளுக்கு என்ன கோபம்…’’  என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர  மாவட்டத்திலிருந்து பிரித்து  புதிதாக 38வது  மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது  என்று கண்துடைப்பிற்காக  அறிவித்த கடந்த அரசின் அவசர கோலம் மேலும் மேலும்  இடியாப்ப சிக்கலை  ஏற்படுத்தியுள்ளதாம்… புதிதாக உருவான  மாவட்டத்தில்  கலெக்டர்,  எஸ்.பி,  டிஆர்ஓ ஆகியோரை மட்டும் நியமித்த கடந்த அரசு அந்தந்த  துறைகளுக்கு தேவையான  அதிகாரிகளை நியமிக்காமல் கண்துடைப்பு நாடகம் நடத்தி  இருந்ததாம்.. இதனால, புதிதாக உதயமான  மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலகம் இல்லாமல்  திருமண நிதி உதவித்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 6 மாதமாகவே  அப்படியே கிடப்பில் கிடக்குதாம். இதுதொடர்பாக கடந்த ஆட்சியில்  மாஜி அமைச்சராக இருந்த மணியமானவர்  கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாம்.  ஆனால் இதுபற்றி அவர் கண்டும் காணாமலும் இருந்து விட்டாராம்..  இதனால் திருமண  உதவி திட்டத்திற்காக பதிவுசெய்த பெண் பயனாளிகள் பரிதவித்து வருகின்றனர்.  ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் நகலை சரிபார்க்க யாரை அணுக  வேண்டும் எனக் கூட தெரியாமல் பயனாளிகள்  அலுவலகத்தை தேடி அலைந்த வண்ணமாக உள்ளனர். இதனால் கடந்த அரசு மீதும், மாவட்ட மாஜி அமைச்சர் மீது  பாதிக்கப்பட்ட பயனாளிகள் கோபத்தில் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘களப்பணிக்கு போகாமல் கலெக்டர் அலுவலகம் மட்டும் செல்லும் கள அதிகாரியை பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர்  மாவட்டத்துல கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே  போகுது. இதுல வெயிலூர் மாநகர் பகுதிகள்ல கொரோனா பாதிப்பு உச்சத்துக்கு  போயிடுச்சு. இந்த நேரத்துல மாவட்டம் தொடங்கி, மாநகர்  வரைக்கும் அனைத்து  உயர் அதிகாரிங்களும் பீல்டுல இறங்கி வேலை செய்றாங்களாம்… ஆனால்,  வெயிலூர் மாநகரத்துல இருக்குற மாநகரத்தோட நல அலுவலர், வெளியே ஆய்வுன்னு  எங்கேயுமே போனமாதிரி தெரியலையாம். ஆனா,  கலெக்டர் ஆபிஸ்ல ஏதாவது மீட்டிங்னா  மட்டும், டேட்டாவை கலெக்ட் பண்ணிக்கிட்டு, பீல்டுல இறங்கி வேலை பார்த்த  மாதிரி வந்துடறாங்களாம். ஏதோ, அப்பப்ப சில இடங்கள்ல ஆய்வு செஞ்ச மாதிரி  போட்டோ மட்டும்  எடுத்துக்குறாங்களாம். ஒருங்கிணைந்து பணியாற்ற இவங்களே  பீல்டுக்கு போகாததாலத்தான், மாநகர் பகுதிகள்ல பாதிப்பு எண்ணிக்கை  உச்சத்துக்கு போய்டுச்சுன்னு, மாநகராட்சி ஊழியருங்க பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கொரோனா முதல் ஆரம்பித்த கலெக்‌ஷனை நிறுத்தாத அதிகாரி.. கோடியில் வீடு கட்டிவிட்டதாக சொல்றாங்களே.. உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சி ஆட்சியில் கொரோனா முதல் அலையின்போது கோவை   மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநராக கடந்த 2019-ல் பணியில் சேர்ந்தார் அந்த  அதிகாரி. பணியில் சேர்ந்தவுடன் வசூல் வேட்டையில் ஈடுபட்டார். இலை கட்சி    ஆட்சியில் கொங்கு மண்டலத்தில் சுகாதாரத்துறையில் அதிகளவு வசூல் வேட்டை   நடத்தியதில் முதலிடம் வகிக்கிறார். அப்போது, பல்நோக்கு சுகாதார   பணியாளர்கள் நியமனம் நடந்தது. இதில், இரண்டு கட்டமாக எழுவது பேர் வரை  நியமனம்   செய்யப்பட்டனர். இவர்களிடம் ₹3 முதல் ₹4 லட்சம் வரை பெறப்பட்டுள்ளது.   அலுவலக கண்காணிப்பாளர் உதவியுடன் பணம் கைமாறியது. மேலும், மினி கிளினிக்   டாக்டர் நியமனம், கிருமி நாசினி மருந்து வாங்கியதிலும் ஊழல்.    ஆர்.டி.பி.சி.ஆர். என்ற கொரோனா பரிசோதனையில் குறிப்பிட்ட சில தனியார்   ஆய்வகங்களுக்கு மட்டும் அதிகளவில் மாதிரிகளை வழங்கி பல லட்சம் சம்பாதித்து   உள்ளார். இவர் பணியாற்றிய கடந்த இரண்டு ஆண்டில் ₹15 கோடி வரை  ஊழல்  செய்து  சொந்த ஊரில் பிரம்மாண்டமான வீடு கட்டியுள்ளாதாக அவரது துறையை சேர்ந்தவர்களே சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தூங்கா நகர மாவட்டத்தில் தகவல் சேகரிப்பில் தூங்கி வழியும் அதிகாரி பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தூங்கா  நகரத்தை சேர்ந்த 2 அமைச்சர்கள் இருவரும், மாவட்ட உயரதிகாரின், மாநகராட்சி  உயரதிகாரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்து, மாவட்டத்தில்  தற்போது கொரோனா தொற்று எப்படி உள்ளது. அதை தடுக்க என்ன  நடவடிக்கை  எடுத்துள்ளீர்கள் என கேட்டாங்க. அதற்கு மாவட்ட உயரதிகாரியோ, இலை கட்சி ஆட்சியில் இருந்தபோது அமைச்சர்களிடம் சொன்னதுபோல.. மழுப்பலான பதிலை கூறினாராம். அதை கேட்டு அமைச்சர்கள்  அதிர்ச்சி அடைந்தனர். அடுத்ததாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மை  நிலவரத்தை கேட்க, அதற்கும் அவர் சரியாக பதில் கூற முடியாமல் திணறியுள்ளார்.  உடனே அமைச்சர்கள், ‘தவறான தகவலை கூறாதீர்கள். உங்களிடம் புள்ளிவிபரம்  இல்லையா.  மதுரை தென்மாவட்டத்தின் முக்கிய நகரம். பல்வேறு மாவட்ட மக்கள்  இங்கு சிகிச்சை பெறுகின்றனர். சரியான புள்ளி விபரத்தினை தெரிவித்தால்தான்,  முதல்வரிடம் தெரிவித்து, தொற்று தடுக்க தேவையான மருந்து, ஆக்சிஜன் உள்ளிட்ட   உதவிகளை பெறமுடியும்’’ என கூறி உள்ளனர். இதையடுத்து அமைச்சர்கள், மற்ற  அதிகாரிகளிடம் புள்ளிவிபரத்தை பெற்று, உண்மை நிலை குறித்து முதல்வருக்கு  தகவல் கொடுத்தனர். மறுநாளே சுகாதாரத்துறை அமைச்சரை நேரில்  வரவழைத்து ஆய்வு  செய்ய வைத்தனர். தூங்காநகரத்துக்கு இப்படி ‘தூங்கி வழியும்’ மாவட்ட உயரதிகாரி உள்ளதாக கீழ்நிலை அதிகாரிகள் புலம்பி வர்றாங்க…‘’ என்றார்  விக்கியானந்தா….

Related posts

தேனிக்காரர் ஆதரவு மாஜி அமைச்சரை திரைமறைவில் கண்காணிக்கும் சேலத்துக்காரர் டீம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சேலத்துக்காரர் டீம் மேல் சீற்றத்துடன் இருக்கும் மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கட்சி நிர்வாகிகளை கண்காணிக்க குழு போடும் முடிவில் இருக்கும் இலை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா