கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆதம்பாக்கத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் எனது தந்தை குமாரை அனுமதித்தோம். வெவ்வேறு தேதிகளில் ரூ.4 லட்சத்து 58 ஆயிரம் கட்டணமாக அந்த மருத்துவமனைக்கு செலுத்திய நிலையில், உரிய சிகிச்சை அளிக்காததால் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி எனது தந்தை இறந்து விட்டார். கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் தான் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், எந்த விதிகளையும் பின்பற்றாமல் அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனை, எனது தந்தையின் உடலை ஒப்படைக்க வேண்டுமென்றால் மீண்டும் ரூ.2,44,000 செலுத்த வேண்டுமென்று நிர்பந்தப்படுத்தி, மொத்தமாக 10 நாளைக்கு ரூ.7,02,562 வசூலித்து விட்டனர்.எனவே, எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியே தமிழக சுகாதாரத் துறை, மாவட்ட ஆட்சியர், இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியோரிடம் புகார் அளித்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட என்னிடம் அதிகமாக வசூலித்த தொகையை திரும்ப தருமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வக்கீல் டி.ஆர்.பிரபாகரன், அரசு தரப்பில் வி.சண்முகசுந்தர் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக அரசு, சென்னை மாவட்ட ஆட்சியர், எம்.ஜி.எம். மருத்துவமனை, தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்….

Related posts

₹1.5 கோடி சொத்து வரி பாக்கி தி.நகரில் 43 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சென்னையிலிருந்து தாய்லாந்துக்கு கடத்த முயன்ற 1.11 கோடி ஹவாலா பணம் பறிமுதல்:  2 கடத்தல் குருவிகள் அதிரடி கைது  தங்கக் கட்டிகளாக மாற்றி வர முயற்சி

என்.எஸ்.சி போஸ் சாலை பகுதியில் இருந்த பிள்ளையார் கோயில் மீண்டும் கட்டப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்