கொரோனா ஊரடங்கு விதிமுறை பின்பற்றாதவர்களிடம் ரூ.3 கோடி அபராதம் வசூலிப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாதது தொடர்பாக இதுவரை ரூ.3,81,63,590 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக வெளியே வரும்போது முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, மண்டல அமலாக்க குழுவினரால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான பூங்காக்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் கடந்த 16ம் தேதி ஒருநாள் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின்போது முகக்கவசம் அணியாத 1278 பேருக்கு ரூ.200 வீதம் ரூ.2,55,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  மேலும், ஜூன் மாதம் முதல் இதுநாள் வரை திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்யப்பட்ட 2,999 மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் மாநகராட்சி வருவாய்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 70 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை ரூ.2,61,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ம் தேதி மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினர் மேற்கொண்ட கள ஆய்வில் 32 பொது மற்றும் தனியார் இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் 7 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு ரூ.26,600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மே 6ம் தேதி முதல் இதுநாள் வரை கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 8,117 நிறுவனங்களிடமிருந்தும், 48,033 தனிநபர்களிடமிருந்தும் ரூ.3,81,63,590 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்