கொரோனா ஊரடங்கில் முழு தளர்வு சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரிப்பு: அதிக விமானங்கள் இயக்கப்படுகிறது

மீனம்பாக்கம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் 3ம் அலை மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருந்தது. இதன்காரணமாக சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. கடந்த டிசம்பரில் தினமும் 180 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு, பயணிகள் எண்ணிக்கை 34 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் 3ம் அலை மற்றும் ஒமிக்ரான் பீதி காரணமாக  கடந்த ஜனவரி மாதம் முதல் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து தினமும் சுமார் 10 ஆயிரம் பயணிகளே பயணித்தனர். இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு சுமார் 100 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டுவந்தன.இந்த நிலையில், தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனா 3ம் அலை மற்றும் ஒமிக்ரான் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இதன்காரணமாக கடந்த ஜனவரி மாதம் இறுதியில் இருந்து நோய் தொற்று வேகமாக குறையத் தொடங்கின. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிப்பாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்பட்டது. மேலும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு கடந்த 2 தினங்களுக்கு முன் அறிவித்தது. விமான பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மற்றும் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் போன்றவையும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. 2 டோஸ் தடுப்பூசிகள் போட்ட சான்றிதழுடன் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி விமானத்தில் பயணிக்கலாம் என்று சுகாதாரத்துறை அறிவித்தது. இதையடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் 10 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக இருந்த பயணிகள் எண்ணிக்கை தற்போது 21 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 200ஐ நெருங்குகிறது. இன்று ஒரே நாளில் 196 விமானங்கள் இயக்கப்பட்டன.சென்னை சர்வதேச விமான சேவைகளை பொறுத்தமட்டில், ஒன்றிய அரசு வழக்கமான விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது. அதனால் சிறப்பு விமானங்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் வருகை, புறப்பாடு கடந்த மாதத்தில் 20 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. தற்போது அது 54 சிறப்பு விமானங்களாக அதிகரித்துள்ளன. ஒன்றிய அரசு சர்வதேச விமான சேவைகளுக்கான தடையை நீக்கிய பிறகு சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் இருந்ததுபோல் 57 விமானங்கள், வருகை 57 விமானங்கள், புறப்பாடு என்று நாள் ஒன்றுக்கு 114 விமானங்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது என்று விமானநிலைய வட்டாரம் தெரிவித்தது.கொரோனா 3ம் அலை மற்றும் ஒமிக்ரான் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சென்னை விமானநிலையத்துக்கு மீண்டும் பயணிகள் மற்றும் விமான சேவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது பயணிகள், விமான அதிகாரிகள் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை