கொரோனா ஊரடங்கால் குமரியில் மாம்பழ விற்பனை மந்தம்-வெளி மாவட்ட வரத்தும் அதிகரிப்பு

நாகர்கோவில் :கொரோனா ஊரடங்கு காரணமாக, குமரி மாவட்டத்தில் மாம்பழ விற்பனை மந்தமாகி உள்ளது.குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் மாம்பழ சீசன் உச்சத்தில் இருக்கும். சாலையோரங்களிலும் விற்பனைக்காக மாம்பழங்களை குவித்து வைத்திருப்பார்கள்.பஞ்சவர்ணம், செந்தூரம், களப்பாடி, இமாம் பசந்த், மல்கோவா உள்ளிட்ட பல்வேறு வகையிலான மாம்பழங்கள் விற்பனைக்கு வந்து குவியும். குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சேலம், திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் மாம்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இமாம் பசந்த், மல்கோவா போன்ற மாம்பழங்கள் கிலோ ரூ.120, ரூ.150 வரை விற்பனை ஆகும்.குமரி மாவட்டத்தில் ஏப்ரல் இறுதியில் இருந்தே மாம்பழ விளைச்சல் அதிகம் நடைபெறும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி  மலையோர பகுதிகளில் மா விளைச்சல் அதிகம் காணப்படும். மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு 10 ஆயிரம் டன் மாம்பழ சாகுபடி  நடப்பதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் இருந்து நீலம், பங்கனப்பள்ளி, செந்தூரம், அல்போன்சா, இமாம்பசந்த் உள்ளிட்ட பல்வேறு ரக மாம்பழங்கள் காணப்படும். கன்னியாகுமரியில் உள்ள பழ பண்ணையிலும் மாம்பழங்களின் பல்வேறு ரகங்களை காண முடியும். இந்த ஆண்டு கோடையில் மழை பெய்தும் கூட, பூக்கள் பருவம் கடந்து விட்ட மாமரங்கள் சாகுபடியில் அதிக விளைச்சலை தந்துள்ளன.இதனால் குமரி மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் வரத்து அதிகமாக உள்ளது. ஆனால் ஊரடங்கு காரணமாக இவற்றை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் தவிக்கிறார்கள். தோட்டக்கலைத்துறை சார்பில் அனுமதி பெற்று ஊர், ஊராக சென்று விற்பனை செய்தாலும் கூட, கொரோனா பீதியால் பொதுமக்கள் இதை வாங்க முன் வர வில்லை என வியாபாரிகள் கூறி உள்ளனர். இதனால் விலையும் பெரிய அளவில் இல்லாமல் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். நாகர்கோவிலில் வல்லன்குமாரன்விளை, கோட்டார், ஆசாரிப்பள்ளம், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாம்பழங்கள் விற்பனைக்காக குவிந்துள்ளன. ஊரடங்கு முடிந்து, மக்கள் நடமாட்டம் தொடங்கினால் விற்பனையை எதிர்பார்க்கலாம் என வியாபாரிகள் கூறி உள்ளனர்….

Related posts

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்

2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்

மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி