கொரோனா ஊரடங்கால் உணவில்லாமல் தவிக்கும் தெரு விலங்குகளுக்கு உதவ தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்!: ஐகோர்ட் வலியுறுத்தல்..!!

சென்னை: தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவு அளிக்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நாட்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தன்னார்வலர்கள் வெளியே வர முடியாத சூழலால் தெரு விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
எனவே கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிக்க கோரி சிவா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி  தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், விலங்குகளுக்கு உணவு அளிக்க தமிழ்நாடு அரசு 9 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிதி வழங்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டார். 
இதையடுத்து சில மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை என்று விலங்குகளுக்கு உணவு அளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதை தொடர்ந்து விலங்குகளுக்கு உணவு அளிக்க ஆளுநர் 10 லட்சம் ரூபாய் வழங்கி உதவி புரிந்துள்ளதாக தெரிவித்துள்ள நீதிபதிகள்,  தெரு விலங்குகளுக்கு உணவு அளிக்க தனியார் நிறுவனங்கள் நிதி உதவியோ, பொருள் உதவியோ அளிக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தி வழக்கு விசாரணையை 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

Related posts

₹1.5 கோடி சொத்து வரி பாக்கி தி.நகரில் 43 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சென்னையிலிருந்து தாய்லாந்துக்கு கடத்த முயன்ற 1.11 கோடி ஹவாலா பணம் பறிமுதல்:  2 கடத்தல் குருவிகள் அதிரடி கைது  தங்கக் கட்டிகளாக மாற்றி வர முயற்சி

என்.எஸ்.சி போஸ் சாலை பகுதியில் இருந்த பிள்ளையார் கோயில் மீண்டும் கட்டப்படும்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்