கொரோனா அச்சத்தால் ஆம்புலன்சில் ஏற்ற மறுப்பு தாயின் சடலத்தை நண்பருடன் பைக்கில் எடுத்துச்சென்ற மகன்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

திருமலை: உடல்நலக்குறைவால் இறந்த பெண்ணின் சடலத்தை கொரோனா அச்சத்தால் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஏற்ற மறுத்ததால், அவரது மகன் பைக்கில் நண்பர் உதவியுடன் கொண்டு சென்றார். ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் கில்லோய் கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சுலம்மா(50). இவர் நேற்று முன்தினம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கினார். இதனால் அவரது மகன், தனது நண்பரின் உதவியுடன் தனது தாயை பைக்கில் உட்கார வைத்துக்கொண்டு, பலாசாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே செஞ்சுலம்மா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடலை தனது சொந்த ஊரான கில்லோய் கிராமத்திற்கு கொண்டு செல்ல, அங்கிருந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்களை அவரது மகன் அழைத்தார். ஆனால், அவர்கள் கொரோனா அச்சம் காரணமாக சடலத்தை கொண்டு செல்ல முன்வரவில்லை. தனது தாய்க்கு கொரோனா இல்லை எனக்கூறி ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் செஞ்சுலம்மாவின் மகன், கெஞ்சியுள்ளார். ஆனால், அவர்கள் சடலத்தை ஆம்புலன்சில் கொண்டு செல்ல ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் செய்வதறியாமல் தவித்த மகன், தனது நண்பரை பைக் ஓட்டும்படி கூறிவிட்டு பைக்கிலேயே தனது தாயின் சடலத்தை உட்கார்ந்த நிலையில் வைத்துக் கொண்டு தாயின் சடலத்திற்கு மாஸ்க் அணிவித்து சொந்த ஊருக்கு கொண்டு சென்றார். இந்த சம்பவங்களை மருத்துவமனையில் இருந்த போலீசாரும் பார்த்து யாரும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகிறது….

Related posts

நில முறைகேடு வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம்; சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு: முதல்வர் பதவிக்கு ஆபத்து

கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள் திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா..? முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

பிரபல மலையாள சினிமா டைரக்டர் பாலச்சந்திர மேனன் மீது நடிகை பலாத்கார புகார்: குரூப் செக்சுக்கும் கட்டாயப்படுத்தினார்