கொரோனாவுக்கு பிறகு மீண்டது சினிமா உலகம்: இந்த வருடத்தில் ரூ. 12,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல்: தென்னிந்திய சினிமாவின் கொடி பறக்கிறது

சென்னை: கொரோனாவுக்கு பிறகு இந்திய சினிமா மீண்டு வந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் ரூ. 12,500 கோடி வசூலை இந்திய சினிமா ஈட்டியுள்ளது.2020 ஜனவரி மாதம் இறுதியில் இருந்து இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது. 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக இந்திய சினிமா அதல பாதாளத்துக்கு சென்றது. படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. தியேட்டர்கள் மூடப்பட்டன. கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதற்கு முன் கடைசியாக 2019ம் ஆண்டில் இந்திய சினிமா பாக்ஸ் ஆபீசில் ரூ. 13 ஆயிரம் கோடி வரை வசூலை பார்த்தது. அதன் பிறகு சினிமா உலகம் படுத்துக்கொண்டது. இந்த ஆண்டில் கொரோனா தொற்று குறைய ஆரம்பித்தது முதல், பொதுமக்கள் பெருமளவில் நிம்மதி அடைந்தனர். தியேட்டர்களுக்கும் தைரியமாக வரத் தொடங்கினர். இந்த ஆண்டின் துவக்கத்தில் மார்ச் மாதத்தில் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படம் வெளியானது. இது பாக்ஸ் ஆபீசில் அதகளம் புரிந்துவிட்டது. இந்தியாவில் மட்டும் ரூ. 700 கோடி வசூலித்தது. உலகம் முழுவதும் ரூ. 1200 கோடி வசூலித்து சாதித்தது. இதையடுத்து விஜய்யின் பீஸ்ட் படம் இந்தியாவில் பெரும் வசூலை ஈட்டியது. பின்னர் அஜித்தின் வலிமையும் வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டது. கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் இந்தியாவில் மட்டும் ரூ. 300 கோடி வசூலித்தது. கேஜிஎஃப் 2 படம், ஆர்ஆர்ஆர் படத்துக்கு கடும் சவாலாக அமைந்தது. இந்த படம் பாக்ஸ் ஆபீசில் ரூ. 1130 கோடி வசூலித்து அமர்க்களம் செய்தது. அதன் பிறகு மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வெறும் ரூ. 70 கோடி (முதல் பாகம் மட்டும்) பட்ஜெட்டில் உருவானது. இந்த படம் ரூ. 500 கோடி வரை வசூலித்தது. இதுபோல் பெரிய படங்கள் ஒரு பக்கமாக வசூல் வேட்டை நடத்திக்கொண்டிருக்க, யாருமே எதிர்பார்க்காத வகையில் சிறு பட்ஜெட்டில் உருவான தென்னிந்திய படங்களும் பாக்ஸ் ஆபீசில் சுனாமியாக தாக்கியதுதான் பெரும் தாக்கம் ஏற்பட காரணமாக அமைந்தது. கன்னட சினிமாவில் உருவான படம் காந்தரா, இந்த படம் வெறும் ரூ. 8 கோடி பட்ஜெட்டில் உருவானது. கன்னடத்தில் ஹிட்டானதும் பேசும்பொருளாக படம் மாறியது.இதையடுத்து இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படம் டப் ஆனது. உலகம் முழுவதும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர். பழங்குடி மக்களுக்காக போராடும் ஹீரோவின் கதைதான் இப்படம். இது ரூ. 400 கோடி வசூலித்து அசத்திவிட்டது. இதையடுத்து தமிழில் புதுமுகம் நடித்த படம் லவ் டுடே. இந்த படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன்தான் ஹீரோ. ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 70 கோடி வசூலித்துவிட்டது. தெலுங்கில் டப்பிங் உரிமை ரூ. 3 கோடிக்கு விலைபோனது. அங்கு இந்த படம் ரூ. 15 கோடி வசூலித்து கலக்கியிருக்கிறது. கார்த்திகேயா 2 தெலுங்கு படம் ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இப்படம் ரூ. 200 கோடி வரை தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங்கில் வசூலித்தது குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்தது. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் தென்னிந்திய படங்களின் ராஜ்ஜியம்தான் இந்த ஆண்டில் இருந்தது. இந்தி படங்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் படு தோல்வி அடைந்தன. அதிலும் பாக்ஸ் ஆபீசின் கிங் ஆக கருதப்பட்ட அக்‌ஷய் குமாரின் சாம்ராட் பிருத்விராஜ், ராம் சேது, ரக்‌ஷா பந்தன் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இந்த மூன்று படங்கள் மட்டுமே ரூ. 550 கோடியில் உருவானவை. இந்த படங்கள் வெறும் ரூ. 90 கோடிதான் வசூலித்தன. 3 படங்கள் சேர்ந்தும் 100 கோடி வசூலை கூட பார்க்க முடியவில்லை. ஆமிர்கானின் லால் சிங் சட்டா படமும் படுத்துக்கொண்டது. குறைந்த பட்ஜெட்டில் உருவான அலியா பட் நடித்த கங்குபாய் கத்தியாவடி, அஜய் தேவ்கன் நடித்த திரிஷ்யம் 2 உள்பட சில படங்கள் மட்டுமே இந்தியில் ரூ. 100 முதல் ரூ. 200 கோடி வரை வசூலித்தன. மற்ற படங்கள் படுதோல்வியை கண்டன. பெங்காலி, போஜ்புரி படங்களும் ஓரளவுக்கு வசூலை ஈட்டியிருக்கின்றன. மொத்தமாக இந்திய சினிமா இந்த ஆண்டில் ரூ. 12,500 கோடி வசூலை குவித்தது. அதில் தென்னிந்திய சினிமா மட்டும் ரூ. 5,320 கோடி வசூலை அதில் வழங்கியிருக்கிறது. இது மொத்த வசூலில் 43 சதவீத பங்களிப்பாகும். இதுவரை இந்திய சினிமா காணாத வகையில் மொத்த வசூலில் தென்னிந்திய சினிமாவின் பங்கு அதிகமாகியுள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 19 சதவீதம் அதிகமாகும்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்